(Source: ECI/ABP News/ABP Majha)
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
TN 11th Exam Results 2024: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில், கடந்த ஆண்டை காட்டிலும் வெறும் 0.04 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.
TN 11th Exam Results 2024: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற 80.08 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகள்:
12 மற்றும் 10ம் வகுப்புகளை தொடர்ந்து, 11ம் வகுப்பினருக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்றவர்களில், 80.08 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 80.04 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், நடப்பாண்டில் அது 0.04 சதவிகிதம் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 3 ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 7 மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் 25 இருபாலர் பள்ளிகள் என, மொத்தம் 35 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதன்படி, தேர்வு எழுதிய ஐயாயிரத்து 607 மாணவ, மாணவிகளில் நான்காயிரத்து 490 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி அதிகபட்சமாக 96.10 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அப்பாசாமி லேன் மேல்நிலைப்பள்ளி 94.74 சதவிகிதமும், திருவான்மியூர் மேல்நிலைப்பள்ளி 94.61 சதவிகிதம், எம்.எச். ரோட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.36 சதவிகிதமும், நெசப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.24 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.’
அதிக மதிப்பெண் எடுத்தவர்கள்:
புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி, 592 மதிப்பெண்களை எடுத்துள்ளார். அத்திப்பட்டு மேல்நிலைப்பள்ளியில் ஒருவர் 580 மதிப்பெண்களையும், அயனாவரம் மேல்நிலைப்பள்ளியில் ஒருவர் 573 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார். எம்.எச். ரோட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் 572 மதிப்பெண்களையும், நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவான்மியூர் மேல்நிலைப்பள்ளியச் சேர்ந்த 3 பேர் 569 மதிப்பெண்களையும் எடுத்துள்ளனர்.
100-க்கு 100 எடுத்த மாணவர்கள்:
கணினி அறிவியலில் 3 பேர், கணினி பயன்பாட்டில் 2 பேர், வணிகம் மற்றும் இயற்பியலில் தலா ஒருவர் என, 5 வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 7 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர். கடந்த ஆண்டில் 9 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 25 பேர் 551 முதல் 600 வரையிலான மதிப்பெண்களையும், 111 பேர் 501 முதல் 550 வரையிலான மதிப்பெண்களையும், 254 பேர் 451 முதல் 500 வரையிலான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.