TN 10th Exam 2023: முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ஏப்.25-ல் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்..
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு சமூக அறிவியல் பாடத்துடன் இன்று (ஏப்.20) நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு சமூக அறிவியல் பாடத்துடன் இன்று (ஏப்.20) நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 10 ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள் மற்றும் ஏப்ரல் 17- அறிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
மே 17ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள்
இந்த நிலையில் இன்றுடன் (ஏப்ரல் 20) சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்தப் பணி மே 3ஆம் தேதி வரை 7 வேலை நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதன்பிறகு மே 17ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
முழு எண்ணிக்கையில் அனுப்பினால் மட்டுமே தேர்வு முடிவுகள்
இதற்கிடையே விடைத் தாள் திருத்தும் பணி குறித்து ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர்களை முழு எண்ணிக்கையில் அனுப்பினால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அந்தப் பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப் பட்டியலை (Teachers Profile) தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும்.
மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள் அல்லது மூன்று முகாம்கள் அமைக்கப் பெற்றிருப்பின் முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (CE, AE, SO & MVO) சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நியமன ஆணை தவறாமல் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அந்தந்த வழியில் போதிக்கும் ஆசிரியர்கள்
தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத் தாட்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்ற வேண்டும். மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்றுமொழி வாரியான விடைத்தாட்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் பணி, குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதம் இல்லாமலும் நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.