TN Exam Tips: பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களா நீங்கள்? இதை முதலில் கட்டாயம் செய்யுங்கள்!
மாணவர்கள் பலர், பாடங்களைக் கடைசி நிமிடத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
2022- 2023ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாளை (13.03.2023) தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிகிறது.
8.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள் 23,747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக உள்ளது. இவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
அறிவியல் பாடப் பிரிவில் அதிக மாணவர்கள்
பள்ளி மாணவ/ மாணவிகளில் அறிவியல் பாடப் பிரிவின்கீழ் மொத்தம் 5,36,819 மாணவர்களில் 2,92,262 மாணவிகளும், 2,44,557 மாணவர்களும் தேர்வெழுத உள்ளனர். வணிகவியல் பாடப் பிரிவின் கீழ் மொத்தம் 2,54,045 மாணவர்களில் 1,25,598 மாணவிகள் மற்றும் 1,28,446 மாணவர்கள் உள்ளனர்.
கலை பாடப் பிரிவின்கீழ் மொத்தம் 14,162 மாணவர்களில் 7,103 மாணவிகளும், 7,059 மாணவர்களும் தேர்வெழுத உள்ளனர். தொழிற்கல்வி பாடப் பிரிவின்கீழ் 46,277 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
இந்த நிலையில் ஓராண்டு முழுவதும் கவனத்துடன், திட்டமிட்டு படித்த மாணவர்கள் கடைசி நேரத்தில் சிலவற்றைப் பின்பற்றுவது முக்கியமாகும்.
தள்ளிப் போடாதீர்கள்
மாணவர்கள் பலர், பாடங்களைக் கடைசி நிமிடத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். நாமுமே குறிப்பிட்ட வேலையைப் பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடுகிறோம்.இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் தேர்வுக்கு இடைப்பட்ட நாட்களில் திட்டமிட்டு, படிக்க வேண்டும்
நல்ல தூக்கம் அவசியம்
தேர்வு எழுதும் நாட்களில் நல்ல, சீரான தூக்கம் அவசியம். குறைந்த அவகாசமே இருக்கிறது என்று நேரத்துக்கு உறங்காமல், இரவு முழுக்கக் கண் விழிப்பது தவறானது. போதுமான அளவில் தூங்கி எழும்பட்சத்தில் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று, தேர்வுக்குத் தயாராகி இருக்கும். பதற்றம் ஏற்படாது.
எளிதாக செரிக்கும் வீட்டு உணவு
தேர்வு நாட்கள் மற்றும் அதற்கு இடைப்பட்ட விடுமுறை நாட்களில், எளிதில் செரிக்கும் வகையிலான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். வெளி உணவுகளையும், செரிக்கத் தாமதமாகும் உணவுகளையும் முடிந்த அளவு தவிர்த்து விடுவது உடல் நலனைப் பாதுகாக்கும். படிக்கும்போது அதிகம் பசிக்கும் என்பதால் கையில் சில ஆரோக்கியமான தின்பண்டங்களையும் உடன் வைத்துக் கொள்ளலாம்.
பதற்றத்துக்கு நோ சொல்லுங்கள்
தேர்வுதான் நம் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்ற எண்ணம் தவறு. நினைத்துப் பதற்றமோ, பயமோ வேண்டாம். தேர்வு முடிவுகளைத் தாண்டிலும் விலை மதிப்புமிக்க வாழ்க்கை நமக்காகக் காத்திருக்கிறது.
புதிதாக எதையும் படிக்காதீர்கள்
தேர்வுக் காலத்தில் ஏற்கெனவே படித்ததை சரியாக ரிவைஸ் செய்து பாருங்கள். மாதிரி வினாத்தாட்களை வைத்தும் படிக்கலாம். புதிதாக ஒன்றைப் படிக்க அதிக கால அவகாசம் எடுப்பதைவிட, ஏற்கெனவே படித்தது மனதில் சரியாக புரிந்து/ பதிந்து இருக்கிறதா என்று பாருங்கள்.
ஓய்வு தேவை
தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் ஒருவித சலிப்பு ஏற்படும். நம்மையும் அறியாமல் படிப்பதில் வேகம் குறையும். அதனால், 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை அல்லது சிறு இடைவெளி தேவைப்படுகிறது என்று உணரும் நேரத்தில் காலாற நடக்கலாம். நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். மொட்டை மாடி இருந்தால், பசுமை கொஞ்சும் இயற்கையை ரசிக்கலாம். பெற்றோருடன் பேசிக் கொண்டிருக்கலாம்.படிப்பதில் பிடித்த பகுதிகளை எடுத்துப் படிக்கலாம்.
மாணவர்களின் சந்தேகங்கள், புகார்களுக்கு
தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க, பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 முதல் இரவு 8 மணி வரை இதைத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பொதுத் தேர்வுகளுக்கு 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/ இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாழ்த்துகள் மாணவர்களே..!