40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது வேலூர் மாவட்டம்தான்.

10,11ஆம் பொதுத்தேர்வு முடிவுகளிலும் வட மாவட்டங்களே கடைசி இடம் என்று தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கல்வியில் விடியல் எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தேர்ச்சி விகிதங்களில் வடமாவட்டங்கள் தொடர்ச்சியாக பின்தங்கி வருவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அரியலூர், தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் 15 இடங்களில் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், பெரும்பான்மையான வட மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் மிக மிக பின்தங்கியே உள்ளன.
ஆனால், கடைசி 10 இடங்களை எடுத்துக் கொண்டால், பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ஆகிய இரு தேர்வுகளிலும் அவற்றில் 8 இடங்களை வட மாவட்டங்கள்தான் கைப்பற்றியுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய புள்ளிவிவரம் ஆகும்.
பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது வேலூர் மாவட்டம்தான். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, இராணிப்பேட்டை, தேனி, நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 10 இடங்களைப் பிடித்திருக்கின்றன. அவற்றில் தேனி, நாகை ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 8 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்டங்கள் ஆகும்.
அதேபோல், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் கடைசி 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகியவை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவற்றில் புதுக்கோட்டை, நீலகிரி தவிர மீதமுள்ள மாவட்டங்கள் வட தமிழகத்தைச் சேர்ந்தவை.
40 ஆண்டாக இதே நிலை
தேர்ச்சி விகிதத்திலும், ஒட்டுமொத்த கல்வி நிலையிலும் வட தமிழகம் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட மாற்றமல்ல. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலைதான் நீடிக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? தீர்வுகள் என்ன? என்பதை ஒவ்வொரு ஆண்டும் தெரிவித்து வருகிறேன்.
வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும்தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள்தான்.
வட மாவட்டங்களுக்கு எப்போது விடியல்?
தமிழ்நாடு அரசுக்கு உண்மையாகவே சமூகநீதிப் பார்வை இருந்திருந்தால் இந்த சிக்கலுக்கு மிக எளிதாக தீர்வு கண்டிருக்க முடியும். வட தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தால் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தியிருக்க முடியும்.
ஆனால், தமிழக அரசோ இந்த மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதால், அதை செய்ய மறுக்கிறது. வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவது கண்டு அரசு கவலைப்படவில்லை. வட மாவட்டங்களுக்கு கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை.
கல்வியில் வட தமிழ்நாடு முன்னேறவில்லை என்றால், எந்தத் துறையிலும் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது. இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அந்த மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை வகுத்து தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.





















