திருவாரூர்: மத்திய பல்கலை., நுழைவு தேர்வில் மொழி மாறி வினாத்தாள்- மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத தேதி அறிவிப்பு
வினாத்தாள் வேற்று மொழியில் மாறிவந்த மாணவர்கள் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மொழி மாறி வினாத்தாள் வந்த விவகாரத்தில், மாணவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத தேசிய தேர்வு முகமை தேதி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு நாடு முழுவதும் 289 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வு திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கோவிவெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்றது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் நேற்றைய தினம் 657 மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 403 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதன்முறையாக தமிழ் மொழியும் இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் மாறி வந்தது. மேலும் சர்வர் பிரச்சினை காரணமாக ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை. இதனால் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு மாலை 5:30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இதில் சர்வர் பிரச்சினை காரணமாக அஞ்சல் அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் வேறு மொழியில் மாறி வந்த மாணவர்கள் மற்றும் சர்வர் பிரச்சனை காரணமாக வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் தேர்வு எழுதாமல் வெளியில் வந்த மாணவர்கள் தங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை நாங்கள் தமிழில் வினாத்தாள் தேர்ந்தெடுத்திருந்த நிலையில் மாற்று மொழியில் வந்திருந்ததால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியது. ஆகவே தேர்வு துறை அதிகாரிகள் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருந்தனர். இதுகுறித்த செய்தியை ஏபிபி நாடுவில் நாம் வெளியிட்டிருந்தோம். இதன் காரணமாக வினாத்தாள் வேற்று மொழியில் மாறிவந்த மாணவர்கள் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற தேர்வில் 34 மாணவர்கள் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 18 பேர் தேர்வு எழுதினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்