IIT Madras: இந்தியாவின் பெருமை! ஐஐடி சென்னை 3 பேராசிரியர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது; எதற்கு?
ஐஐடி சென்னை பேராசிரியர் தலப்பில் பிரதீப், பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும் பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோருக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐஐடி சென்னையின் (IIT Madras) மூன்று பேராசிரியர்கள், மத்திய அரசின் 'ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் 2025' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைகளின் பல்வேறு துறைகளில் சிறப்பான மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளுக்காக தேசத்தின் மிக உயர்ந்த அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, பேராசிரியர் தலப்பில் பிரதீப், பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும் பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தேசிய முன்னுரிமைகளை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை முன்னெடுத்துச் சென்று உலகளாவிய அறிவியல் எல்லைகளை முன்னேற்றுவதில் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையங்களில் ஒன்றாக ஐஐடி சென்னையின் நிலையை உறுதிப்படுத்துகிறது.
இந்திய அரசால் வழங்கப்படும் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது, நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திய முன்மாதிரியான சாதனைகள் மற்றும் வாழ்நாள் பங்களிப்புகளைப் பாராட்டுகிறது. இது நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது — விஞ்ஞான் ரத்னா (VR), விஞ்ஞான் ஸ்ரீ (VS), விஞ்ஞான் யுவா – சாந்தி ஸ்வரூப் பட்நகர் (VY-SSB) மற்றும் விஞ்ஞான் டீம் (VT).
விருது பெற்றவர்கள்:
- விஞ்ஞான் ஸ்ரீ: பேராசிரியர் தளப்பில் பிரதீப், வேதியியல் துறை, IIT மெட்ராஸ்.
- விஞ்ஞான் யுவா – சாந்தி ஸ்வரூப் பட்நகர்: பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம், மின் பொறியியல் துறை மற்றும் பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, IIT மெட்ராஸ்.
பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம், குறைந்த விலையில் சுகாதார தொழில்நுட்பங்கள், மருத்துவ சாதனங்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட பெரிய அளவிலான மனித மூளை இமேஜிங் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், சுகாதாரத் தொழில்நுட்பப் பகுதியில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆர் & டி மையங்களை நிறுவியதற்காகவும் கவுரவிக்கப்பட்டுள்ளார். அவரது குழு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்கள், தொழில்கள், அரசு நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த விலையில் சுகாதார தொழில்நுட்பங்களை உருவாக்கி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 15 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளைச் சென்றடைந்துள்ளது.
பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால், மறைகுறியாக்கத் துறையில் (Cryptography) அவரது முன்னோடி ஆராய்ச்சிப் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது ஆராய்ச்சிக் குழு, மேம்பட்ட மறைகுறியாக்கச் செயல்பாடுகளைச் செயல்படுத்தப் பயன்படும் புதிய கணிதக் கோட்பாடுகளை (mathematical conjectures) உருவாக்குவதில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.






















