RTE | ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: வழிகாட்டுதல் மையம் ஆரம்பித்த திமுக எம்.எல்.ஏ எழிலன்..!
ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ மருத்துவர் எழிலன் நாகநாதன் தனது அலுவலகத்தில் வழிகாட்டுதல் மையம் தொடங்கியுள்ளார். ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (Right To Education) கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2021- 2022 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. rte.tnschools.gov.in என்ற தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக, இந்த சட்டத்தின் கீழ் ஜூலை 5- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ மருத்துவர் எழிலன் தனது அலுவலகத்தில் வழிகாட்டுதல் மையம் தொடங்கியுள்ளார். நிறைய பெற்றோருக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு இல்லை. இதற்கான இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. நிறைய பெற்றோர் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளையே அணுகி உதவி கோருகின்றனர்.
ஆனால், நிறைய தனியார் பள்ளிகள் எப்படியாவது பெற்றோரின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்கவே பார்க்கின்றன. உண்மையில் ஏழை எளிய மக்களுக்கு 25% இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும். இதனை அறிந்து கொண்டே, ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ மருத்துவர் எழிலன் தனது அலுவலகத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறார். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இதை அவர் ஏற்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ள முகாம் மூலம் இதுவரை 60 மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்துள்ளார். இதில் 10 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணம் குறித்து முகாமில் உள்ள தன்னார்வலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இது குறித்து எம்எல்ஏ மருத்துவர் எழிலன் கூறும்போது, ”மாணவர் சேர்க்கை தொடங்கியவுடன் நான் எனது தொகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளுக்குச் சென்று ஆர்டிஇ மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வேன். எனது தொகுதியில் 24 முதல் 27 தனியார் பள்ளிகள் இருக்கின்றன” என்று கூறினார். வள்ளுவர் குடியிருப்பைச் சேர்ந்த ஆர்.சதீஷ் கூறுகையில், நான் எம்எல்ஏ அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமின் உதவியுடன் விண்ணப்பித்துள்ளேன். நான் எனது மகனின் கல்வி குறித்து மிகவும் கலங்கிப் போயிருந்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக எனக்கு நிரந்தர வேலையும் வருமானமும் இல்லை. இதனால் எனது மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சேவை மையம் குறித்து அறிந்தவுடன் நான் இங்கு வந்து ஆர்டிஇ மூலம் விண்ணப்பித்துள்ளேன். இப்போது எனக்கு என் மகனுக்கு நல்ல பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது என்று கூறினார்.
ஆர்டிஇ மூலம் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் என்னென்ன?
* மாணவரின் பிறப்புச் சான்றிதழ்
* மாணவரின் அண்மைப் புகைப்படம்
* பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டை
* வருமானச் சான்றிதழ் (நலிவடைந்த பிரிவினர்)
* சாதிச் சான்றிதழ் (வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்)
* சிறப்புச் சான்றிதழ் (வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்)
இந்த ஆவணங்களை விண்ணப்பிக்கும் முன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.