Teachers Strike: 'அரசு ஊழியராக மட்டும் ஆகாதீர்கள்'- 2 வாரம் கடந்து நீளும் போராட்டம்; இடைநிலை ஆசிரியர்கள் வேதனை!
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி 15 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி 15 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம்
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டு மே 31 வரை வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 ஆகவும் அதற்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.5200 ஆகவும் உள்ளது. அதாவது ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைக்கப்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல 90 சதவீத ஆசிரியர்களின், குறிப்பாக பெண் ஆசிரியா்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் வகையிலும், தொடக்கக் கல்வித்துறையில் 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி மாநில முன்னுரிமையைக் கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி முன்னுரிமை மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலின்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
தினந்தோறும் போராட்டம், கைது
தினந்தோறும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து 16ஆவது நாளாக இன்றும் (மார்ச் 5) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தங்களின் போராட்டம் குறித்து பிரீத்தி என்னும் இடைநிலை ஆசிரியர் கூறும்போது, ’’இடைநிலை ஆசிரியர் என்ற ஒரு பணி இல்லாமல் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
பன்னிரண்டு ஆண்டுகாலமாய் எல்லாம் மாறும் என நம்பி இதே பணியில் நீடித்துவிட்டோம். தகுதிக்கேற்ற ஊதியம் இல்லாது உழைப்பது அவலம். அது தருகிற மன உளைச்சலிலிருந்து மீளவந்து பணியை அர்ப்பணிப்போடு செய்வது அத்தனை எளிதல்ல. ஆனால் நாங்கள் செய்கிறோம். இதனால் ஏற்படுகிற உள, உடல் சோர்வுகளுக்கெல்லாம் எந்த இழப்பீட்டைக் கொடுத்துச் சரிசெய்துவிட முடியும்?!
படிப்பெல்லாம் பொய்யா?
படிப்பை மட்டுமே 'பெரிது', 'பெரிது' எனச் சொல்லி நம்பிக்கையூட்டி வளர்க்கப்பட்ட தலைமுறை நாங்கள். அதெல்லாம் பொய்யெனத் தோன்றுகிறது. எங்கள் நம்பிக்கைக் கண்ணாடி சுக்குநூறாய் உடைந்து தெறிக்கிறது.
போதும். சுயதொழிலோ, தனியாரையோ கூட நம்புங்கள். அரசு ஊழியராக மட்டும் ஆக வேண்டாம்’’ என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.