கால்நடை மருத்துவம், பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விவரம்!
மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 21ஆம் தேதி கடைசியாக இருந்த நிலையில், அவகாசத்தை ஜூன் 28 வரை நீட்டித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கால்நடை மருத்துவம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பிவிஎஸ்சி & ஏஎச் (BVSc & AH) படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு நான்கரை ஆண்டுகள் படிப்பு மற்றும் 1 ஆண்டு உள்ளுறைப் பயிற்சி அவசியம் ஆகும். இவை தவிர்த்து வேறுசில படிப்புகளும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
B.Tech. - Food Technology
உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக். பயோடெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும்.
BTech – Poultry Technology
கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்பு, ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் படிப்பும் மொத்தம் 4 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகின்றது.
BTech – Dairy Technology
பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக்.டய்ரி டெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். எனினும் முந்தைய படிப்புகளைக் காட்டிலும் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.
இதற்கிடையே பி.வி.எஸ்சி. & ஏ.எச். மற்றும் பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) B.V.Sc. & A.H. and B.Tech. (Food Technology/ Poultry Technology/ Dairy Technology) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது.
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர ஜூன் 21ஆம் தேதி 5 மணி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த அவகாசம் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’இதுவரை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 2,392 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது ’’என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: http://www.adm.tanuvas.ac.in/