PK Ilamaran : காலை உணவுத் திட்டத்தை முன்வைத்த முன்னோடி.. தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் திடீர் மரணம்..
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (ஜூன் 17) அதிகாலை மரணம் அடைந்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (ஜூன் 17) அதிகாலை மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு ஆசிரியர்களும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பி.கே.இளமாறன். இவர் கொடுங்கையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்தார். தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். அரசுப் பள்ளிகளின் தேவைகள் குறித்தும் கல்வியின் இன்றைய சூழல் பற்றியும் தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தவர்.
தேவைப்படும் நேரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வந்தார். அரசின் திட்டங்களையும் அறிவிப்புகளையும் விமர்சித்தவர். அரசுப் பள்ளிகளின் நலனுக்காகத் தொடர்ந்து ஊடகங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார் பி.கே.இளமாறன்.
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தவர் இளமாறன். அரசு இப்போது முன்னெடுத்துள்ள காலை உணவுத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து 2015களிலேயே கோரிக்கை வைத்தவர்.
2018ஆம் ஆண்டு சிறப்பு அனுமதி பெற்று, சொந்த செலவில் தன்னுடைய பள்ளியில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி, 120 மாணவர்களுக்கு காலை உணவை வெற்றிகரமாக வழங்க ஆரம்பித்தார். அம்மா உணவகத்தில் இருந்து இட்லியையும் பொங்கலையும் வரவழைத்து, பள்ளியிலேயே மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்தார் இளமாறன். பின்னாட்களில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்தத் திட்டம் விரிவு செய்யப்பட்டது.
தமிழ்ப் பற்றாளராகத் திகழ்ந்த இளமாறன், தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தை நிறுவி நடத்தி வந்தார்.
பெரம்பூரில் இறுதிச் சடங்குகள்
இந்நிலையில் பி.கே.இளமாறனுக்குஇன்று (ஜூன் 17) அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அவரின் திடீர் மறைவுக்கு ஆசிரியர்களும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வியாசர் நகர், முதலாவது குறுக்குத் தெரு, வியாசர்பாடியில் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பெரம்பூர் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.