புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழகம்; நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசு!- என்னவாகும்?
இனியும் மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதியை ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில், மாநில அரசு தொடர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படும்.
![புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழகம்; நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசு!- என்னவாகும்? Tamil Nadu government on new education policy; The central government withheld SSA funds! புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழகம்; நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசு!- என்னவாகும்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/9438beceb2b24cb4bbff2ec5d6e8e83e1724333692669314_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் மழலைக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட அளவிலான நிதியை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. இதன்படி 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 40 சதவீத நிதிக்கு மாநில அரசே பொறுப்பு.
ரூ.3,586 கோடி ஒதுக்கீடு
இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக நிதியாக ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கான 60 சதவீதத் தொகை ரூ.2,152 கோடி 4 தவணைகளில் ஒதுக்கீடு செய்யப்படும். முதல் தவணையாக ரூ.573 கோடி நிதி ஜூன் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆகஸ்ட் மாதமே முடிய உள்ள நிலையில், நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்துத் தமிழக அரசு பல்வேறு நினைவுறுத்தல் கடிதங்களை அளித்தும், மத்திய அரசு இதுவரை கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
நிதி இல்லாவிடில் என்ன ஆகும்?
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டிருப்பதால், வட்டார வள மைய பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்துடன் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், ஆசிரியர் பயிற்சி, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் கடந்த சில மாதங்களாக மாநில அரசின் நிதிப் பங்களிப்பின்கீழ் சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இனியும் மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில், மாநில அரசு தொடர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படும்.
பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புதல்
இதற்கிடையே புதிய கல்விக் கொள்கை அம்சங்களைத் தவிர்த்து பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பி இருந்தது. எனினும் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு மொழிக் கொள்கை
10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக 5+3+3+4 முறை, 6ஆம் வகுப்பு முறை தொழிற்கல்வி, மும்மொழிக் கொள்கை ஆகியவை இதன் முக்கியக் கூறுகள் ஆகும். தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு மொழிக் கொள்கையே அமலில் இருந்து வருகிறது.
கல்வியாளர்கள் கண்டனம்
இந்த நிலையில் மத்திய அரசின் செயல்பாடு, கூட்டாட்சி முறைக்கு மாறானது என்று கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கும் பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத சூழலில், எதற்காக நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)