TN 12th Exam 2025: பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் பாரபட்சமே கிடையாது; பள்ளிக் கல்வித்துறை செயலர் கடும் எச்சரிக்கை!
Tamil Nadu 12th Exam 2025: பொதுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் இல்லாமல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது கருணை காட்டப்படாது- பள்ளிக் கல்வித்துறை

மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் இல்லாமல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வை 8,21,057 தேர்வர்கள் எழுதுகின்றனர். மேல்நிலை இரண்டாமாண்டிற்கு 3,316 தேர்வு மையங்களிலும் மேல்நிலை முதலாமாண்டிற்கு 3,316 தேர்வு மையங்களிலும் பத்தாம் வகுப்பிற்கு 4,113 தேர்வு மையங்களிலும் என மொத்தம் 25,57,354 தேர்வர்கள் 2024-25-ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வினை எழுதுகின்றனர். சென்னையில் 64 ஆயிரம் பேர் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
முதல்முறையாக கணினி மூலம் பிளஸ் 2 தேர்வு
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஆனந்தன், முதல்முறையாக கணினி மூலம் பிளஸ் 2 தேர்வை எழுதுகிறார். இன்று அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடத்துக்கான தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
கருணை காட்டப்படாது
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும்போது, ’’பொதுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் இல்லாமல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது கருணை காட்டப்படாது’’ என்று தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் அனைத்துப் பொதுத்தேர்வுகளுக்காகவும் அமைக்கப்பட்டு உள்ள 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வுகள் முடிந்த பிறகு விடைத்தாள் திருத்துதல் பணிக்காக தமிழகம் முழுவதும் 150 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.






















