TN 12th Exam 2024: பிளஸ் 2 வேதியியல், கணக்கியல் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் கருத்து!
Tamil Nadu 12th Exam 2024: வேதியியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்று மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்று மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 22 ஆயிரம் 200 மாணவ, மாணவிகள் மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
தமிழ்நாட்டில் 3,300-க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்வுகள் எப்படி?- மாணவர்கள் கருத்து
மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். அதேபோல மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இது ஓரளவும் எல்லோரும் எழுதும் வகையில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். எனினும் 11ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறி இருந்தனர்.
தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மின்னியல் பொறியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து இன்று (மார்ச் 11ஆம் தேதி) வேதியியல், கணக்கியல், நிலவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் எப்படி இருந்தன என்று பார்க்கலாம்.
மோனிகா, புனித அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி
இன்று வேதியியல் தேர்வு எளிதாகவே இருந்தது. நன்கு தெரிந்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டு இருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தன. 2 மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் தலா ஒரு கேள்வி மட்டும் யோசித்து எழுதும்படி இருந்தது.
சிவப் பிரகாஷ், டான் பாஸ்கோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை
கணக்குப் பதிவியல் பாடம் எளிதாகவே இருந்தது. புத்தகத்துக்கு உள்ளே இருந்து கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட சில கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் 95-க்கும் மேல் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.