யாருடா அந்த பையன்..? மயிலாடுதுறை மாவட்ட அளவில் இவர்தான் முதலிடம்...!
10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 496 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை மாவட்ட அளவில் கொள்ளிடம் தனியார் பள்ளி மாணவர் தவசிமாலை என்ற சிறப்பிடம் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11 -ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.10-ம் வகுப்பு தேர்வு முடிகள் மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
118 மண்டலங்கள்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கியது. இந்த 10-ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15-ம் தேதி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்களை 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விடைத்தாள்கள் திருத்தம்
அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 21-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. முன்னதாக தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறையால் கூறப்பட்டது. ஆனால், 12 -ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, ஒரு நாள் முன்னதாகவே மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகலாம் என பரவலாக பேசப்பட்டது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மே 16-ம் தேதியான இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். 11 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16 -ம் தேதியான இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அன்பில் மகேஷ் கூறியிருந்த நிலையில், 10 -ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தொடர்ந்து காலையிலேயே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை இன்று காலை வெளியிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட விபரம்
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 6037 மாணவர்கள், மாணவிகள் 6112 என 12,149 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 5530 மாணவர்களும், 5878 மாணவிகள் என மொத்தம் 11,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.60 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.17 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.90% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 93.90 சதவீதம் எடுத்து 2.35 சதவீதம் அதிகம். மாநில அளவில் 23 வது இடம் பெற்றுள்ளது.
மாவட்ட அளவில் முதலிடம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர் தவசி மலை 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். இதேபோன்று சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி உமாபார்வதி என்ற மாணவி 495 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மேலும் மாவட்ட அளவில் 494 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை 5 பேர் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.






















