(Source: ECI | ABP NEWS)
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வு மற்றும் வினாடி வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையில் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தளங்களில் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துற இயக்குநர் கூறி உள்ளதாவது:
’’மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும். கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம், சேலம் (ஏற்காடு) ஆகிய இரு மாவட்டங்களில் இரண்டு பிரிவுகளாக 5 நாட்கள் சுற்றுலா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி இலக்கியம், அறிவியல், வினாடி வினாப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தெரிவு செய்திடவும் அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வு மற்றும் வினாடி வினா போட்டியில் சிறந்து விளங்கிய 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் நீலகிரி மாவட்ட முகாமிற்கு 625 மாணவிகளும், 429 மாணவிகள் காத்திருப்போர் பட்டியலுடனும், சேலம் மாவட்டம் ஏற்காடு முகாமிற்கு 275 மாணவர்களும் காத்திருப்போர் 171 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலுடன் சேர்த்து 1500 மாணவ, மாணவியர்களின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
தெரிவுப் பட்டியலில் உள்ள மாணவ / மாணவிகள் பங்கேற்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவ, மாணவியர்களை அந்தந்த மாவட்ட பட்டியலில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால், நீலகிரி, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
பெற்றோர் ஒப்புதல்
நடைபெற உள்ள கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் இணைப்பில் உள்ள அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சார்ந்த மாணவ / மாணவியர்களின் பெற்றோர் , பாதுகாவலர்களிடமிருந்து அதற்கான ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும்.
கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக உடன் செல்லும் ஆசிரியர்கள் எவ்வித புகாருக்கும் இடமின்றி கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
மாணவிகளை அழைத்துச் செல்லும்பொழுது கட்டாயம் 20 மாணவிகளுக்கு 1 பெண் ஆசிரியரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பின் ஒரு மாணவியின் தாயாரினையும் விருப்பத்தின் பேரில் அனுமதிக்கலாம். மாணவியருக்கான முகாம் நீலகிரி மாவட்டத்திலும், மாணவர்களுக்கான முகாம் சேலம் மாவட்டத்திலும் நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.






















