Half Yearly Exam: மாணவர்களே... வந்தாச்சு அரையாண்டுத் தேர்வு அட்டவணை; விடுமுறை இத்தனை நாட்களா?
6 முதல் 9அம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குமான முழு தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். பாடவாரியாக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
டிசம்பர் 9 முதல் 23 வரை
இதில் 1 முதல் 5ஆம் வகுப்புக்கு டிசம்பர் 16ல் தொடங்கி 23ஆம் தேதி வரையும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 9 முதல் 23ஆம் தேதி வரையும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தேர்வுக்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டது. மீதமுள்ள வகுப்புகளுக்கான அட்டவணை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் 6 முதல் 9அம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குமான முழு தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
முழு அட்டவணை இதோ!
இந்த அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ளார். அதன்படி 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதி தமிழ் பாடத்துடன் தேர்வு தொடங்குகிறது.
தொடர்ந்து டிச.10ஆம் தேதி விருப்ப மொழி, டிச.12 ஆங்கிலம், டிச.16 கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. அதேபோல டிச.18 உடற்கல்வி, டிச.20 அறிவியல், டிச.23 சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் 6, 8ஆம் வகுப்புகளுக்கு காலையும் 7, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
அரையாண்டு விடுமுறை எப்போது?
தொடர்ந்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் புத்தாண்டான ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.