TN Govt Schools: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தொடங்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டில் முதன்முறையாக 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துள்ளது. அதன் பரப்புரை வாகனத்தை கொளத்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இணைந்து தொடங்கி வைத்தனர். அத்துடன் பரப்புரை பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளதாவது:
''தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் ஓசையின்றி ஒரு மறுமலர்ச்சிக்கான முன்னேற்பாடுகள் நடந்தவண்ணம் உள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பல திட்டங்கள் மாணவர்களின் நலனுக்கெனஉருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொது மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளும் பரப்புரையை பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்திருக்கிறது.
உலகம் முழுவதும் கலைகள், விளையாட்டு வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளுதல் மிகுந்த பயனை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வாயிலாக ஆடல்- பாடலுடன் பாடங்களை கற்றுக்கொள்வது குழந்தைகளின் மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுக்கிறது.
புதுமைப் பெண் திட்டம்
அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்விக்குச் செல்லும்போது 'புதுமைப் பெண்' திட்டத்தின்கீழ் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது
மாணவர்களின் திரைப்பட ரசனையையும் விமர்சனப் பார்வையையும் வளர்க்கும் சிறார் திரைப்பட விழாக்கள் பள்ளிதோறும் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கும் விதமாக தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய சிறார் இதழ்கள் வெளியிடப்படுகின்றன. நூலகத்திற்கென்று தனி நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்த இதழ்களை ஆழ்ந்து வாசிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அறிவியல் மனப்பான்மை
மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் உட்பட பலவிதமான போட்டிகளோடு இலக்கிய மன்றச் செயல்பாடுகள் ஒவ்வொரு பள்ளியிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டியதன் அவசியத்தை நம் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது அதன்படி மாணவர்களுக்கு வானவில் மன்றம் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்களுடைய அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்துகிறது அரசு.
மாநில அளவில் கலைத் திருவிழாக்கள்
மாணவர்களின் கலை ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஆட்டக் கலைகள், இசை, நாடகம், நடனம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் பள்ளி தொடங்கி நடத்தப்படுகின்றன. விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாநில அளவிலான கலைத் திருவிழா, சிறார் திரைப்பட விழா, சிறார் இலக்கியத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள், வானவில் மன்றப் போட்டிகள், வினாடி-வினா போட்டிகள் ஆகியவற்றில் வென்ற 150 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பள்ளி நேரம் முடிந்தபின்னும் கற்க விரும்பும் மாணவர்களுக்கென்றே 'இல்லம் தேடிக் கல்வித்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் உயர்கல்வி/வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க துணை புரிகிறது அரசு.
பள்ளிகளில் இசை, நடனம், நாடகம், ஓவியம் போன்ற நுண்கலைகளுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென தனிச் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் மற்ற மாணவர்களோடு பள்ளியில் இணைந்தும் கல்வி கற்கின்றனர்.
குழந்தைகளை சேர்க்கவேண்டும்
மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் சென்ற கல்வியாண்டு தொடங்கி மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன. ஆகவே அரசுப் பள்ளியில் என கேட்டுக்கொள்ளும் வகையில் ஒரு பரப்புரையை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்கிறது.
இதற்கிடையே இன்று (17.04.2023) நடந்த இதன் தொடக்க நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றனர். சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் வரும் கல்வியாண்டின் (2023-24) முதல் மாணவர் சேர்க்கை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.கே.பவித்ரா உள்ளிட்ட பத்து குழந்தைகள் அப்பள்ளியின் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.