சேலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நேரில் பார்வையிட்ட ஆட்சியர்
சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று மாணவிகள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதில் 8 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 18,830 மாணவர்களும், 20,443 மாணவிகளும் எனக்கு மொத்தம் 39,273 பேர் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்று 313 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வை சந்திக்கவுள்ளார் பள்ளி மாணவர்களுக்காக 149 மையங்களும், தனித்தேர்வர்களுக்கான ஆறு மையங்களும் என சேலம் மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான இருக்கை, குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்று சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வு அறை ஒதுக்கீடு, தேர்வு என் ஒட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் மாவட்டத்தில் துறை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர், வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, குழு அலுவலர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பொது தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தேர்வு கட்டுப்பாட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று மாணவிகள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். மாணவிகளுக்கு முறையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மனதைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் ஒரு தேர்வு முடித்தபின்னர், எழுதிமுடித்து தேர்வு குறித்து வருத்தமும், மகிழ்ச்சியும் கொள்வதை விட்டுவிட்டு அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டும் அனைத்து தேர்வுகளையும் சிறப்பாக எழுத வேண்டும் என்று கூறினார். இதற்கு பெற்றோர்கள் பொதுத்தேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களை சிரமப்படுத்தும் விதமாக பேசுவது, நடந்து கொள்வது இல்லாமல் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் முறையாக தேர்வுக்கு தயாராக பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் போது 10 மற்றும் 11-ம் வகுப்பு பொது தேர்வுக்கான மையங்கள் மற்றும் வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.