Exam Postponed: கனமழையால் தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அந்த வட்டத்திற்குள்ளான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளிலும் பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெற இருந்தன. பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாற்று தேதிகள் dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான-கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
14.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்க கடல் பகுதிகள்:
14.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.