Part Time Teachers: பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே ஊதியம், ஊக்கத்தொகை: சீமான் வலியுறுத்தல்
ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெரும் துரோகமாகும்- சீமான்.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத் தொகையை தீபாவளிக்கு முன்பே திமுக அரசு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது?
’’கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும்.
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெரும் துரோகமாகும். அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித் தவித்து வருகின்றார்கள்.
அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே திமுக அரசு வழங்க வேண்டும்!@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 23, 2024
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர… pic.twitter.com/gMC3AXo8W1
நவம்பர் மாத ஊதியம், விழாக்கால ஊக்கத் தொகை
ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அத்துடன், நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத் தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.