Part Time Engineering : வயது வரம்பில்லை; பகுதி நேர பொறியியல் படிப்புகள்: ஜூன் 27- க்குள் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
’தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூரில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பொறியியல் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு கோர் (Core Courses) பாடப் பிரிவுகள் என்று கூறப்படும் சிவில் (Civil), மெக்கானிக்கல் (Mechanical) , எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் (ECE), எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் (ECE), கம்ப்யூட்டர் சயின்ஸ் (CSE) ஆகிய படிப்புகளில் சுமார் 1,400 காலி இடங்கள் உள்ளன.
இங்கு தினசரி மாலை 6.15 முதல் 9.15 மணி வரை பாடங்கள் கற்பிக்கப்படும். நேரத்தைப் பொறுத்து, ஞாயிற்றுக் கிழமை, பிற விடுமுறைகளில் முழு நாளும் கற்பிக்கப்படும்.
யாரெல்லாம் படிக்கலாம்?
பகுதி நேர பி.இ. படிப்பு 4 ஆண்டு காலப் படிப்பாகும். இந்தப் படிப்புகளில் சேர டிப்ளமோ படிப்பு முடித்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் வேலைக்குச் சென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர எந்த வயது வரம்பும் இல்லை. முதலாமாண்டு பி.இ. படிப்புகளுக்கு மே 31 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 27ஆம் தேதி (மாலை 5 மணி ) கடைசித் தேதி ஆகும்.
விண்ணப்பத்தின் நிலவரம் குறித்து ஜூலை 5ஆம் தேதி தெரிந்துகொள்ளலாம். தேர்வர்கள் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியாகும். கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவு, பிசி, எம்பிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்சி, எஸ்சி அருந்ததியினர், எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன் https://www.ptbe-tnea.com/ptbeassets/downloads/pdf/PTBE-Hand-Book-2024-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து கல்வித் தகுதி, வயது வரம்பு, வழிமுறை உள்ளிட்ட பிற விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.ptbe-tnea.com
தொலைபேசி எண்கள்: 0422-2590080, 9486977757
இ மெயில் முகவரி: coordinatorptbe@cit.edu.in