ஐஐடி கல்வி நிறுவனங்களில் 40% ஆசிரியர் பணியிடங்கள் காலி - மத்திய கல்வி அமைச்சகம்
கல்வி அமைச்சர் அளித்த தரவுகளின் படி, ஐஐடி கல்வி நிறுவனங்களில் 6,511 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 4,370 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாட்டிலுள்ள 23 ஐஐடி உயர்க்கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் பணி நிலையில் 40%க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்தார். மக்களவையில், ஐஐடி போன்ற உயரக்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அளித்த தரவுகளின் படி, ஐஐடி கல்வி நிறுவனங்களில் 6,511 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 4,370 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10%, பட்டியலின பிரிவினற்கு 16.66%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மொத்த பணியிடங்களில் 59.5% விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும் 12 விழுக்காடு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
மும்பை ஐஐடியில் மொத்தமுள்ள 693 ஆசிரியர் பணியிடங்களில், வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது, 96% இடங்கள் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லி ஐஐடியில் வெறும் 6.5% இடங்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணிகளில் 599 பணிகள், அதாவது 88% இடங்கள் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 66 இடங்கள், பட்டியலின வகுப்பினருக்கு 16 இடங்கள், பழங்குடியினருக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஆசிரியர்-மாணவர் விகிதம் மற்றும் காலியிடங்களை நிரப்ப எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2021 செப்டம்பர் முதல் 2022 செப்டம்பர் காலத்துக்குள் சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் இடஒதுக்கீடு பிரிவுகளின் கீழ் காலியிடங்களை நிரப்புவதற்கான திட்டங்களை லட்சிய நோக்கில் (Mision Mode) செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அரசுப் பணியாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் 10 அமைச்சகங்கள்/துறைகளில் உள்ள பட்டியல் பிரிவினர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் குறித்து கேள்விக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு பதிலளித்தது. அதன் படி, 2019 டிசம்பர் 31 அன்று பட்டியல் பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 14366, பழங்குடியினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 12612, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான நிரப்பப்படாதப் பணியிடங்கள் 15088 ஆக இருந்தன என்று தெரிவிக்கப்பட்டது.