இன்னும் சில மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. அதிக மதிப்பெண் பெற 5 எளிய வழிகள்!
முதலில் சமீபத்திய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த பாடங்கள் எவை, எதில் அதிக கவனம் தேவை என்பதைப் பட்டியலிடுங்கள்.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கவுள்ளன. தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சரியான திட்டமிடல் மற்றும் 'ஸ்மார்ட்' படிப்பு முறையைக் கையாண்டால் நிச்சயம் அதிக மதிப்பெண்களைப் பெறலாம். அதற்குத் தேவையான 5 முக்கிய குறிப்புகள் இதோ:
- பாடத்திட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
முதலில் சமீபத்திய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த பாடங்கள் எவை, எதில் அதிக கவனம் தேவை என்பதைப் பட்டியலிடுங்கள். அதிக மதிப்பெண்கள் (Weightage) கொண்ட பாடங்களுக்கும், அடிக்கடி கேட்கப்படும் தலைப்புகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்.
- தரமான கால அட்டவணை
தினமும் உங்களால் பின்பற்றக்கூடிய ஒரு கால அட்டவணையை (Timetable) உருவாக்குங்கள். பல மணி நேரம் தொடர்ந்து படிப்பதை விட, இடையில் சிறு ஓய்வு எடுத்து, முழு கவனத்துடன் படிப்பதே சிறந்தது. முக்கியமாக, அன்றாடம் படிக்கும் பாடங்களை அன்றே திருப்புதல் (Revision) செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்.
- விடை எழுதும் பயிற்சி
பல மாணவர்களுக்குப் பதில் தெரிந்திருந்தாலும், அதைச் சரியான முறையில் வழங்கத் தெரியாமல் மதிப்பெண்களை இழக்கின்றனர். எனவே, கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் விடை எழுதிப் பழகுங்கள். இது உங்கள் கையெழுத்து, வேகம் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.
- சந்தேகங்களை உடனே தீருங்கள்
பாடங்களின் அடிப்படைக் கருத்துகளை (Fundamentals) தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். சில பாடங்களில் மட்டும் நிபுணத்துவம் பெறுவதை விட, அனைத்து பாடங்களிலும் அடிப்படையை வலுப்படுத்துவது நல்லது. கடைசி வாரம் வரை சந்தேகங்களை வைத்துக்கொள்ளாமல், ஆசிரியர்களிடம் கேட்டு உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
- உடல்நலம் முக்கியம்
தேர்வை எண்ணிப் பயப்படாமல், சத்தான உணவு மற்றும் போதுமான உறக்கம் அவசியம். இரவு வெகுநேரம் விழித்திருப்பதைத் தவிர்த்து, மனதை அமைதியாக வைத்திருங்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்து, புத்துணர்ச்சியான மனநிலையுடன் படித்தால் வெற்றி நிச்சயம்.






















