பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு தொடக்கம்..!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பப் பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தயாரிக்கும் பணிகளுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 19-ந் தேதி தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இணையதளம் வழியாக வெளியிட்டார். மாநிலத்தின் முதன்முறையாக மாணவர்களுக்கான மதிப்பெண் தசம விகித அடிப்படையில் வெளியிடப்பட்டது.
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதால், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை, பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் நேற்று அறிவித்தது.
இதையடுத்து, பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. மாணவர்கள் காலை முதல் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று தொடங்கும் இந்த விண்ணப்ப பதிவு வரும் ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையடுத்து, பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்டு 25-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது. பின்னர், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 7-ந் தேதி தொடங்க உள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் இந்த கலந்தாய்வு வரும் அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை துணைக்கலந்தாய்வு நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
முன்னதாக, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அவர்களது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 50 சதவீதம், 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 20 சதவீதம் மற்றம் 12-ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வில் 30 சதவீதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 100 சதவீதத்திற்கு என்று கணக்கிடப்பட்டள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மறுதேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்கள் மட்டுமின்றி அனைத்து பாடங்களுக்கும் மறுதேர்வு எழுத வேண்டும் என்றும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.