One entrance: ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு?- நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைக்க யுஜிசி திட்டம்
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் உயர் கல்வி ஆணையமான யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு அமலாகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
அதேபோல மத்திய உயர் கல்வி நிலையங்களில் பொறியியல் படிக்க, JEE என்னும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்துகிறது.
இந்த நிலையில், அண்மையில் க்யூட் எனப்படும் CUET பொது நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்தது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ( CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியாகி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைக்க யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு அமலாகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
நுழைவுத் தேர்வுகளை ஒன்றிணைக்கும் தகவலை யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
நீட், JEE, CUET ஆகிய 3 நுழைவுத் தேர்வுகளே இந்தியாவின் முதன்மையான தேர்வுகள் ஆகும். இந்த 3 தேர்வுகளையும் சுமார் 43 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் இதில், குறைந்தபட்சம் 2 தேர்வுகளை எழுதுகின்றனர்.
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறும்போது, ’’ஒரே மாதிரியான அறிவை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் ஏன் ஒரே நேரத்தில் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்? இந்தத் தேர்வுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரே நுழைவுத் தேர்வின் மூலம், பல விதமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடுகிறோம்.
பொதுவாக சில மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளைப் படிக்க முயற்சிக்கின்றனர். அவை கிடைக்காதபோது CUET தேர்வு மூலம் பொது அறிவியல் படிப்புகளைப் படிக்கின்றனர். இதனால் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் CUET தேர்வுடன் ஒன்றிணைத்து விடலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக பேனா- காகித முறையில் அல்லாமல், தேர்வுகள் வருங்காலத்தில் கணினி முறையில் நடத்தப்படும்’’ என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்