#NTAdeferNEETUG:2022 நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவையுங்கள்- வலுக்கும் கோரிக்கை
2022ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
2022ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
கோவிட் பாதுகாப்பு விதிகள்
சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது.
மேலும், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்துத் தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஜூலையிலேயே தேரு நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்வுக்குத் தயாராக போதிய அவகாசம் இல்லை என்று தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். #NTAdeferNEETUG என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து நீட் (இளங்கலை) - ஜேஇஇ மாணவர் சங்கம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்குச் சரியாக 10 மாதங்கள் கூட நேரம் கிடைக்கவில்லை. தேர்வு முடிவுகளை வெளியிடவும் கலந்தாய்வை நடத்தவும் வழக்கமான கால அளவைவிட அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அதிகாரிகளுக்காக மாணவர்கள் ஏன் அவதிப்பட வேண்டும்? NTAdeferNEETUG" என்று பதிவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்காகத் தயாராகும் தேர்வர் ஒருவர் கூறும்போது, "நீட் 2022 இளங்கலைத் தேர்வைத் தள்ளி வையுங்கள். தாமதமான கலந்தாய்வு எங்களின் தவறு அல்ல. எங்களுக்குத் தேவையான நேரத்தை தயவுசெய்து அளியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்