TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Govt job competitive examination: அரசு பணி கனவோடு போட்டித்தேர்விற்கு தேர்வர்கள் இரவு பகலாக படித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு பணிக்கு தயாராகும் தேர்வர்கள்
வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் அரசு வேலையில் இணைய வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இதற்காக இரவு பகலாக அரசு தேர்விற்கு தயாராகி வருவார்கள். அதிலும் தனியார் பயிற்சி வகுப்பு மூலமாக தேர்விற்கு தயாராகுவார்கள். இதற்காக பல லட்சங்களும் கட்டணமாக கட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏழை, எளிய மாணவர்களும் அரசு பணியில் இணைய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இலவசமாக பயிற்சி வகுப்பானது நடத்தி வருகிறது. இதனையுத்து TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், TNPSC மற்றும் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை. சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணிவரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளதாகவும், எனவே இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு
எனவே கட்டணமில்லா பயிற்சியில் சேரவிரும்பும் ஆர்வலர்கள் www.cecc.in என்ற ஆன்லைன் வாயிலாக 22.12.2025 முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு அறியலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சிக்கு தேர்வர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















