NIFT 2023: ஃபேஷன் டிசைனிங்கில் ஜொலிக்கலாம்: நிஃப்ட் 2023-க்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, பிற விவரங்கள் இதோ..
ஃபேஷன் டிசைனிங் உள்ளிட்ட படிப்புகளை அளிக்கும் மத்திய அரசின் நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
ஃபேஷன் டிசைனிங் உள்ளிட்ட படிப்புகளை அளிக்கும் மத்திய அரசின் நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் நிஃப்ட் எனப்படும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அணிகலன் வடிவமைப்பு, ஃபேஷன் கம்யூனிகேஷன், ஃபேஷன் வடிவமைப்பு, பின்னலாடை வடிவமைப்பு, தோல் வடிவமைப்பு மற்றும் ஜவுளி வடிவமைப்பு உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளைக் கற்பிக்கின்றன.
அதேபோல, முதுகலை வடிவமைப்புத் திட்டங்களும் (MDes) கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதுகலை ஃபேஷன் மேலாண்மை (MFM), முதுகலை ஃபேஷன் தொழில்நுட்பம் (MFTech) உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.
என்ன தகுதி?
NIFT 2023 Eligibility Criteria: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10, 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அதிகபட்சம் ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதேபோல நிஃப்ட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதும் அவசியம்.
தேர்வு முறை எப்படி?
நிஃப்ட் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு ரூ.2,000 விண்ணப்பக் கட்டணமாகும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் nift.ac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிசம்பர் 31ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். அதே நேரத்தில் தாமதக் கட்டணத்துடன் ஜனவரி முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம். இதற்குத் தேர்வர்கள் ரூ.5000 தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நிஃப்ட் 2023-க்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3 ஆவது வாரத்தில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் nift.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் எப்போது?
நுழைவுத் தேர்வு முடிவுகள் 2023 மார்ச் மாதத்தில் வெளியாகும். ஏப்ரல் மாதத்தில் நேரடித் தேர்வு நடைபெறும். இறுதிக்கட்டத் தேர்வு முடிவுகள் மேம் மாதம் வெளியாகும்.
இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் https://nift.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA3MQ== என்ற இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், NIFTADMISSIONSIN@GMAIL.COM என்ற இ- மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.