NExT Exam: நீட் தேர்வுக்கு சமமானது நெக்ஸ்ட் தேர்வு; 2020 பேட்ச் முதல் அமல்- மத்திய அமைச்சர் அதிரடி
நீட் தேர்வுக்கு சமமானது நெக்ஸ்ட் தேர்வு என்றும் 2020 பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு சமமானது நெக்ஸ்ட் தேர்வு என்றும் 2020 பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நெக்ஸ்ட் தேர்வு வழிமுறைகள் குறித்த அறிவிக்கையை அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. இதில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு, பொது தகுதித் தேர்வாக நெக்ஸ்ட் தேர்வு (National Exit Test NExT) நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மெரிட் அடிப்படையில் முதுநிலை மருத்துவம் படிக்க முடியும். அதேபோல மருத்துவத் தொழில் செய்யப் பதிவு செய்ய முடியும். மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்ய முடியும்.
இந்த நிலையில் எய்ம்ஸ் ராய்பூரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அடிக்கல் நாட்ட மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வருகை தந்தார். அவரிடம் நெக்ஸ்ட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 2019 பேட்ச் எம்பிபிஸ் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டியதில்லை. 2020 பேட்ச் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டி இருக்கும்.
மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் மத்திய அரசோ, தேசிய மருத்துவ ஆணையமோ எடுக்காது. அதேபோல நெக்ஸ்ட் தேர்வு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான இறுதித் தேர்வாக இருக்காது.
மருத்துவம் முடித்த மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படும். ஆனால் பட்டம் பெற்ற பிறகு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது நெக்ஸ்ட் தேர்வு நீட் தேர்வுக்கு சமமான ஒன்றாகும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.