New India Literacy Programme: புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; தேர்வு எப்போது? வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
கற்போர் விருப்பத்திற்கேற்பவும், வசதிக்கேற்பவும் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு எழுதலாம்.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு நவம்பர் 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.
இதுகுறித்துப் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் கூறி உள்ளதாவது:
''தமிழ்நாட்டில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கடந்த 2022-23 ஆம் ஆண்டு முதல் அனைத்து 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 2022-23ஆம் ஆண்டு முதல் 2024-25ஆம் ஆண்டு வரை 16 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
2024- 25ஆம் ஆண்டில் அனைத்து எழுதப் படிக்கத் தெரியாதோர் அனைவரையும் 100% கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் திட்டச் செயல்பாடுகளை இரண்டு கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு கட்டமாக
அதன் அடிப்படையில், திட்ட முதற்கட்டத்தில் விரிவான கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள 6.14 லட்சம் நபர்களுள், 5.09 லட்சம் நபர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 30.113 கற்போர் எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 30,113 தன்னார்வலர்களின் உதவியுடன் 200 மணி நேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் 2024 ஜூலை மாதம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்ட இரண்டாம் கட்டம் 2024 நவம்பர் மாதம் முதல் 2025 மார்ச் மாதம் வரை செயல்படுத்தப்படும்.
தற்போது, திட்ட முதற்கட்டத்தின்கீழ். விரிவான கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டு, அனைத்து 38 மாவட்டங்களிலும் எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 5,09,459 கற்போருக்கு வருகின்ற 10.11.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு விவரம்:
தேர்வு நடைபெறும் நாள் 2024 நவம்பர் மாதம் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
தேர்வு நடைபெறும் நேரம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் மையம் மையம் செயல்படும்.
பணிபுரியும் கற்போருக்கு வசதியாக மையம் சார்ந்த பள்ளி வளாகத்திலோ அல்லது அவர்கள் இடத்திலோ அல்லது கற்போர் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது மூத்த கற்போராகவோ இருப்பின் அவர்களுடைய இல்லங்களிலோ இந்த அடிப்படை தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்.
அனைத்து கற்போரும் 100% தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகளை எழுத்தறிவு மையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர், தலைமையாசிரியர், பள்ளி உதவி ஆசிரியர் மற்றும் தன்னார்வலரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்னென்ன வசதிகள்?
தேர்வு எழுதுவதற்கான இருக்கை வசதிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி, போதிய வெளிச்சம் மற்றும் கற்றோட்ட வசதி, வயதில் மூத்த மற்றும் மாற்றுத்திறனாளிக் கற்போருக்கு வசதியாக சாய்தள நடைபாதை போன்ற வசதிகள் இருப்பதை அந்தந்த எழுத்தறிவு மையம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கற்போர் விருப்பத்திற்கேற்பவும், வசதிக்கேற்பவும் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு எழுதலாம். ஒரு கற்போருக்கான மொத்த தேர்வு நேரம் - 3 மணி நேரம் ஆகும்.
தேர்வு நடைபெறும் நாளில் கற்போரின் வருகையை, வருகைப் பதிவுப் படிவத்தில் தன்னார்வலர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.