Competitive Exams: திட்டமிட்ட தேதிகளில் நீட், க்யூட், ஜேஇஇ தேர்வுகள்: என்டிஏ திட்டவட்டம்
ஏற்கெனவே திட்டமிட்ட தேதிகளில் நீட், க்யூட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்ட தேதிகளில் நீட், க்யூட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 18.72 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
அதேபோல மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர க்யூட் நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
ஜேஇஇ தேர்வுகள்
இதற்கிடையே மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜூலை 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
தேர்வை ஒத்திவைக்கத் தேர்வர்கள் கோரிக்கை
2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதினர். கடந்த கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வே இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
முன்னதாக முதுகலை நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதத்தில் 3 தேர்வுகள்
இதற்கிடையே மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதனால், தேர்வுகளை என்டிஏ தள்ளிவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஏற்கெனவே திட்டமிட்ட தேதிகளில் நீட், க்யூட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகத் தேர்வுகள் பலமுறை தள்ளி வைக்கப்பட்டன. இந்த முறை தேர்வுகள் தள்ளிப்போகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் என்டிஏ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்