NEET UG 2022: நீட் தேர்வுக்கு முதன்முறையாக 18 லட்சம் பேர் விண்ணப்பம்; பெண்களே அதிகம்
2022ஆம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வை எழுத முதன்முறையாக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வை எழுத முதன்முறையாக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்களுக்கு 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தற்போது விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கு இன்று கடைசித் தேதி ஆகும்.
இந்நிலையில் இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி நீட் தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 18,72,329 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
8,07,711 ஆண் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல பெண் தேர்வர்கள் 10,64,606 பேர் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2,57,562 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழில் தேர்வெழுத 31,803 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி, 543 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெறுகிறது.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்கலாம்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும், neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்