NEET PG Exam: நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு - 2 லட்சம் பேருக்கு அனுமதி
NEET PG Exam: நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இஒன்று நடைபெற உள்ளது.
NEET PG Exam: நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ள முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு:
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிற நுழைவுத் தேர்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக, நீட் முதுகலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இறுதியாக வெளியான அறிவிப்புகளின் படி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது.
இரண்டு ஷிஃப்டுகளாக தேர்வு:
இன்று நடைபெற உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 8ம் தேதியே வெளியானது. அதன்படி, சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கும் இன்றைய தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் 12.30 மணி வரையில் ஒரு ஷிஃப்டாகவும், பிற்பகல் 3.30 மணி முதல் 7 மணி வரை ஒரு ஷிஃப்டாகவும் இரண்டு ஷிஃப்ட்களாக இன்று தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே, தேர்வு அறைக்குள் மாணவர்கள் சென்றுவிட வேண்டும். எனவே, மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு அறைக்குச் செல்வதற்கு ஏற்றவாறு தயாராகுங்கள்.
மாணவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டியவை:
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் பொருட்களை தேர்வு அறைக்கு கொண்டு வர வேண்டும்:
- பார்கோடு அட்மிட் கார்டின் அச்சிடப்பட்ட நகல்
- நிரந்தர / தற்காலிக SMC/MCI/NMC பதிவின் நகல், தேர்வு மையத்தால் தக்கவைக்கப்பட வேண்டும்
- பின்வரும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடிகளில் ஒன்று (அசல், செல்லுபடியாகும் மற்றும் காலாவதியாகாமல் இருக்க வேண்டும்): பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட், ஆதார் அட்டை (புகைப்படத்துடன்)
எவற்றிற்கெல்லாம் அனுமதி இல்லை?
மிண்ணனு சாதனங்கள், உணவுப் பொருட்கள், மோதிரங்கள், வளையல்கள், நெக்லெஸ், கழுத்தணிகள், பணப்பைகள், கண்ணாடிகள், பெல்ட்கள் மற்றும் தொப்பி ஆகியவற்றிற்கு தேர்வு அறையில் அனுமதி கிடையாது. தேர்வு மையங்களில் தனிப்பட்ட உடமைகளுக்கான சேமிப்பு வசதிகள் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்க. தேர்வு மையத்திற்கு வந்ததும், அங்கீகரிக்கப்படாத நபர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்ய, விண்ணப்பதாரர்கள் அடையாளச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தேர்வு மைய சர்ச்சைகள்:
இதனிடையே, தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் ஜூலை 31 ஆம் தேதி வெளியானது. அதில் தமிழ்நாடு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் முதுகலைத் தேர்வு மையங்கள் பல நூறு கி.மீ தாண்டி வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டால் எப்படி சென்று வருவது என தமிழக மாணவர்கள் குமுறியிருந்தனர். இதுதொடர்பாக ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. அதன் விளைவாக, தமிழ்நாடு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.