NEET Coaching: மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ சிறப்புப் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சேருமாறு அரசுப்பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சேருமாறு அரசுப்பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொழிற்கல்வி இணை இயக்குநர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
முன்கூட்டியேஎ திட்டமிட்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகளில் வட்டார அளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 1.30 மணி நேரம், குறிப்பாக 4 முதல் 5.30 மணி வரை பாடவாரியாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அதேநேரத்தில் பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளிலேயே இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் நடைபெற உள்ளன.
அலுவலர்களின் பணி என்ன?
* விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதல்
* பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக் குழுவின் உதவியோடு தயார் செய்தல்
* பயிற்சிக்குரிய வினாத்தாட்களைத் தயார் செய்ய முகாம் நடத்துதல்
* வினாவிற்கான விடைகளைத் தயாரித்தல்
* பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல்
* குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல்
* மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்
* மாநில புலனக் குழு / மாவட்ட புலனக் குழு ஏற்படுத்துதல்
* அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறச் செய்தல்.
* நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல்
* பயிற்சிக்குரிய வினாத்தாட்கள்/ விடைக்குறிப்புகள் தயார் செய்தல்
* ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ / மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாவட்டக் குழுக்கள் விளக்குவதை கண்காணித்தல்.
* அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணித்தல்.
* பாடம் ஒன்றிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களை ஒன்றிணைத்து செயல்படுதல்
கிழமை - பாடம்
திங்கள் - தாவரவியல் / கணிதம்
செவ்வாய் - இயற்பியல்
புதன் - விலங்கியல் / கணிதம்
வியாழன் - வேதியியல்
வெள்ளி - மீள்பார்வை / சிறு தேர்வு
நீட் / ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.