National Testing Agency : ஒரே பெயரில் மாணவர்களை ஏமாற்றி மோசடி; தேசியத் தேர்வுகள் முகமை எச்சரிக்கை!
"சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு இணையதளங்கள் மூலம் என்டிஏ மற்றும் அதன் அதிகாரிகளின் பெயரை தவறாகப் பயன்படுத்துகின்றனர்''.
தேசியத் தேர்வுகள் முகமையின் பெயரில் சிறிது மாற்றம் செய்து, மாணவர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்து வருவதாகத் தேசியத் தேர்வுகள் முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான க்யூட், ஆசிரியர் தகுதித் தேர்வான யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் உள்ளிட்ட முக்கியமான நுழைவுத் தேர்வுகளை என்டிஏ என்று அழைக்கப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.
தேசியத் தேர்வுகள் முகமையின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடு
இந்த நிலையில் தேசியத் தேர்வுகள் முகமையின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, இணைய தள முகவரியில் சிறிய மாற்றம் செய்தோ, என்டிஏ அதிகாரிகள் போன்று வேடமிட்டோ முறைகேட்டில் ஈடுபட்டு, மாணவர்களை ஏமாற்றுவது தெரிய வந்தது.
இதையடுத்து என்டிஏ போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு இணையதளங்கள் மூலம் என்டிஏ மற்றும் அதன் அதிகாரிகளின் பெயரை தவறாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் என்டிஏ அதிகாரிகள் போல் வேடம் போடுகின்றனர். குறிப்பாக இளநிலை நீட் தேர்வு ஓஎம்ஆர் முறைகேடு அல்லது தேர்வு குறித்த மோசடி அதிகம் நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற ஆள்மாறாட்டம் அல்லது என்டிஏ மற்றும் அதன் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தேர்வுகள், அதன் முடிவுகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு https://www.nta.ac.in/ மற்றும் https://exams.nta.ac.in/NEET/ ஆகிய இணையதளங்களை மட்டுமே காண வேண்டும் எனவும் என்டிஏ அறிவுறுத்தி உள்ளது.
பொது மக்கள் https://exams.nta.ac.in/NEET/images/public-notice-for-neet-ug-2024-false-cases-of-impersonation-usingname-of-nta-employees.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, என்டிஏ அறிக்கையைக் காணலாம்.
பின்னணி என்ன?
நாடு முழுவதும் மே 5ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில், 13,31,321 மாணவிகளும் 9,96,393 மாணவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் 17 மூன்றாம் பாலினத்தவரும் தேர்வை எழுதினர். இவர்களுக்கு யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளான, ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இத்தனை மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்தது.
இதற்கிடையே பிஹார், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் நீட் முறைகேடு நடந்ததாகவும் ஆள் மாறாட்டம், வினாத்தாள் முன்கூட்டியே கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. விசாரணையில் சில உறுதியும் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து என்டிஏ இவ்வாறு தெரிவித்துள்ளது.