NMMS Scholarship Scheme: 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் மத்திய அரசு உதவித்தொகை: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சார்பாக, விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வும் ஒன்று. இதன்படி, மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
எனினும் 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும். எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.
என்ன தகுதி?
* அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
* தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடையாது.
* கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது.
* மாணவர்கள் தேர்வுக்கு முன்பு குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.
* ஆண்டு வருமானம்
இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது.
பாடத் திட்டம்
இந்தத் தேர்வுக்கெனத் தனி பாடத்திட்டம் எதுவுமில்லை. 7 மற்றும் 8ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களில் இருந்து பொதுவான கேள்விகள் கேட்கப்படும். மனத் திறன் சோதனை (MAT) மற்றும் உதவித்தொகை சார் திறன் சோதனை (SAT) என இரண்டு தாள்களாகத் தேர்வுகள் நடத்தப்படும்.
இரண்டு தாள்களிலும் தனித்தனியாகத் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். இரண்டு தேர்வுகளிலும் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஒட்டுமொத்தமாகக் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டியது அவசியம். முன்னதாக தேசிய அளவில் மாணவர்களைத் தேர்வு எழுத வைக்க, மாநிலங்கள் தனியாகத் தேர்வு நடத்தும்.
என்ன உதவித் தொகை?
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என்ற வீதத்தில் மொத்தம் ரூ.36 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதற்கென எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் தனி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். அதில் மத்திய அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் பணம் வரவு வைக்கப்படும். எனினும் ஒவ்வோர் ஆண்டும் உதவித்தொகையைப் புதுப்பிக்க வேண்டியது முக்கியம்.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி பள்ளி மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.