Namma School: அரசு- தனியார் பங்களிப்புடன் நம்ம ஸ்கூல் திட்டம்; இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
’நம்ம ஸ்கூல்’ என்ற அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு - தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
’நம்ம ஸ்கூல்’ என்ற அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு - தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக டிசம்பர் 17 அன்று சென்னை, சேத்துப்பட்டு கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்பள்ளியின் 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022 நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''ஒவ்வொரு பள்ளிக்கும், அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்ய வேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பை தமழக அரசு சார்பில் மேற்கொள்ள உள்ளோம். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டத்தை திங்கள்கிழமை (இன்று) நான் தொடங்கி வைக்க உள்ளேன்.
இந்தத் திட்டத்திற்காக ஓர் இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த இணைய தளத்தை வைத்து தமிழ்நாட்டில் இருக்கும் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதி உதவி செய்ய முடியும். அரசு பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், அரசு பள்ளியில் படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆகியோர்கள் தங்களின் பள்ளிக்கு நிதி உதவி அளிக்க முடியும்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
நம் பள்ளி நம் பெருமை#NammaSchool | #நம்மஸ்கூல் | #நம்மschool#TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNEducation | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh @mkstalin pic.twitter.com/BVmeftC1VV
— தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (@tnschoolsedu) December 18, 2022
அந்த வகையில் இன்று‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நம்ம ஸ்கூல் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கக்கூடிய நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்யப்படும். அதேபோல சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஐஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கலாம்.
தத்தெடுப்பதன் மூலம், பள்ளிகளின் சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், நவீன கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, தரமான ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும்.