என்னாது? 10ஆம் வகுப்பில் 0 தேர்ச்சி விகிதம்; பள்ளி மீது விசாரணையைத் தொடங்க உத்தரவு!
அந்த மாணவரும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிதால் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பூஜ்யத் தேர்ச்சி விகிதம் தேர்வாகி உள்ளது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
உத்தரான்கண்ட் மாநிலத்தில், நைனிதால் மாவட்டம் உள்ளது. இங்குள்ள உக்கல்கண்டா வட்டத்தில் பத்ராகோட் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 0 ஆக உள்ளது அங்குள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
பூஜ்ய தேர்ச்சி விகிதம்
இங்கு ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்வை எழுதிய நிலையில், அவர் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார். மாநிலம் முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த ஓர் அரசுப் பள்ளி மட்டுமே பூஜ்ய தேர்ச்சி விகிதத்தைக் கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து நைனிதால் முதன்மைக் கல்வி அலுவலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் கூறும்போது, இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
7 ஆசிரியர்கள் பணி
இந்தப் பள்ளியில் கலை, கணிதம், அறிவியல், இந்தி, ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைக் கற்பிக்க 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் கலைப் பிரிவு ஆசிரியர் மட்டும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 7 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 6ஆம் வகுப்பு மற்றும் 7ஆம் வகுப்பில் தலா 2 மாணவர்கள் சேர்ந்த நிலையில், 8, 9 மற்றும் 10ஆம் வகுப்பில் தலா 1 மாணவர் சேர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் அந்த மாணவரும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















