Anbil Mahesh Press Meet: TET தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு; மதமாற்ற சர்ச்சை - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது என்ன?
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அதிகம் நம்பக்கூடியவர்கள் நாம். இவ்வாறு நடந்ததன் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப காலம் நீட்டிக்கப்படுமா? கன்னியாகுமரி அரசுப் பள்ளி மாணவிக்கு நேர்ந்த மதமாற்ற சர்ச்சை ஆகியவை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, 'இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் கல்வியும் ஜனநாயகமும்' என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கத்தை நடத்தியது. எழும்பூரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நீட், க்யூட் - 'தேர்வுகளை ஒதுக்கிவைத்து வணிக மயமாகி அடிமைப்படுத்தும் நோக்கில், கல்வி குறித்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை மீதும் தற்போதுள்ள சமவாய்ப்பின்மை மீது நடத்தப்படும் தாக்குதல்' எனும் தலைப்பில் மத்திய கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் கோபால் பேசினார்.
இதற்கிடையே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
''1975-க்குப் பிறகு கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இன்று மத்திய அரசு நடந்து கொள்வதைப் பார்க்கும்போது கல்வி எந்தப் பட்டியலில் இருக்கிறது என்றே தெரியவில்லை. கல்வியைத் தனியாக ஒரு ரகசியப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் என்றே கருத வேண்டி இருக்கிறது. அந்த அளவு கண்ணைக்கட்டி அழைத்துச் செல்லும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது.
மதம் மூலம் அரசியல் வேண்டாம்
சட்டமன்றத்தில் பேசும்போது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி தொகை ஆகிய பிரச்சினையை பாருங்கள், தமிழ்நாட்டில் மதம் சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு வந்து அதன் மூலமாக அரசியல் செய்ய நினைக்க வேண்டாம் என்று முதல்வர் தெளிவாக விளக்கி விட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, தையல் கற்பிக்கும் ஆசிரியை தன்னிடம் மதப்பரப்புரை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும் ஆட்சியரிடம் இது குறித்துத் தீவிரமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அதிகம் நம்பக் கூடியவர்கள் நாம். இவ்வாறு நடந்ததன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குக் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒன்றேகால் லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக நான்கு லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கத் தேவை இருக்காது என்று முதல்வர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும்''.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.