School Discipline : நிலைமை கைமீறினால் மாணவர்களுக்கு டிசி வழங்க அரசு தயங்காது; அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
நிலைமை கைமீறிச் சென்றால் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நிலைமை கைமீறிச் சென்றால் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான கல்வி குறித்த கருத்தரங்கை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 12ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.
அதற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''கொரோனாவுக்குப் பின் நீண்ட காலத்துக்குப் பிறகு வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும், ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கருத்தரங்கத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மகிழ்ச்சிகரமான சூழலை அளிக்கும் இடமாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகளைத் தவிர்க்க, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். மாணவர்களின் தனித்திறனை வளர்க்கப் பள்ளிகளில் கலை இலக்கியத் திருவிழாக்கள், மன்றங்கள், சூழலியல் அமைப்புகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இவற்றை ஆரோக்கியமான போட்டிகளாக நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களை சர்வதேச, தேசிய அளவில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நன்னெறி வகுப்புகள், உளவியல் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. எதிலும் கணிதம், யாவும் அறிவியல் என்ற வகையில் தமிழகம் முழுவதும் நடமாடும் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
'எங்களைப் பாதுகாக்க இந்த அரசு இல்லையா?'
இதையும் மீறி மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும்போது, அவர்களின் பெற்றோரே மாற்றுச் சான்றிதழைத் தரச்சொல்கின்றனர். மாற்றுச் சான்றிதழைத் தருவது ஏற்கெனவே உள்ள விதிமுறைதான். ஆனால் அதை இதுவரை யாரும் செய்யவில்லை. ஆசிரியர்கள் பெற்றோரிடம் பேசி, மீண்டும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் படிப்பைத் தொடர வைத்துள்ளனர். இப்போது, 'எங்களைப் பாதுகாக்க இந்த அரசு இல்லையா?' என்று ஆசிரியர்கள் கேட்கும்போது அதற்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே 8 மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொண்ட மாணவர்களுக்கும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் ஏதும் வழங்கப்படவில்லை. அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிலைமை கைமீறிச் செல்லும்போது மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.
2 ஆண்டுகளாகப் பொதுமுடக்கத்தில் இருந்ததால், இவ்வாறு நடந்துகொண்டதாக மாணவர்கள் சாக்கு கூறுகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் மீதே அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. தவறாக நடந்துகொள்ளும் மாணவர்களை விசாரிக்க ஒழுங்குக் குழு அமைக்கப்படும். அந்தக் குழு முறையாக இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்க இணை இயக்குநர்கள், இயக்குநர்கள் கவனிப்பர். அதற்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். இனி மாணவர்கள் எந்தவிதத் தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது''
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.