அழைப்பு விடுத்த ஆசிரியை; ஆஜர் ஆன அமைச்சர் அன்பில் மகேஸ்!- சுவாரசியப் பின்னணி!
தங்கள் பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஆசிரியை ஒருவர் அழைப்பு விடுக்க, நேரில் சென்று அமைச்சரே ஆய்வில் ஈடுபட்டார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 என்னும் திட்டத்தின்கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் இருக்கும் அரசுப்பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஃபேஸ்புக் பக்கத்தில் வளர்மதி என்னும் தலைமை ஆசிரியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தங்கள் பள்ளியை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசிப்பார்கள்
இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ’’டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் க.வளர்மதி ஆகிய நான் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். எங்கள் பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதி, ஓசூர் கல்வி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனேகொள்ளு ஊராட்சிக்குட்பட்ட டி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசிப்பார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றீர்கள்.
தாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக வருகின்றபோது எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து எம்மாணவர்களின் கற்றல் வாசிப்புத் திறனை ஆய்வு செய்திடுமாறு பள்ளி தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சார்பில் பணிவன்போடு வணங்கி அழைக்கின்றோம்’’ என்று தெரிவித்து இருந்தார்.
நேரில் சென்ற அமைச்சர் அன்பில்
அழைப்பை ஏற்று, பள்ளிக்கு நேரில் சென்றார் அமைச்சர் அன்பில். சென்றவர் பள்ளிகளின் திறமையைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ’’டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் க.வளர்மதியின் அழைப்பினை ஏற்று அப்பள்ளிக்கு சென்றோம்.
‘எம்மாணவர்களின் கற்றல் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்’ என அழைப்பு விடுத்தார் தலைமை ஆசிரியர். ‘பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு தடையின்றி வாசிப்பார்களா?’ எனும் எண்ணத்தோடு அப்பள்ளிக்கு சென்றோம்.
உண்மைதான்! அனைத்து மாணவர்களும் சரளமாக வாசிக்கின்றார்கள். எழுதுகின்றார்கள். தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பெருமதிப்பிற்குரிய அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களே, நீங்களும் அழையுங்கள். தங்களின் அன்பான அழைப்பை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தங்களின் பள்ளிகளுக்கு வருகை புரிவார்கள். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்வார்கள்.
இன்றே பயணத்தைத் தொடங்குவோம்
நானும் வருவேன்! இன்றே பயணத்தைத் தொடங்குவோம். தமிழ்நாடு முதலமைச்சர் வழியில் அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.