Madras University Result: சென்னை பல்கலைக்கழக இளநிலைத் தேர்வு முடிவுகள் எப்போது?- தவிக்கும் மாணவர்கள்!
Madras University Exam Results 2024: சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
முதுநிலை பட்ட மாணவர் சேர்க்கை முடிந்தும் இளநிலைத் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிடாததால், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும்பாலும் நடந்து முடிந்துவிட்டது. முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஜூன் மாதம் வெளியாகும் தேர்வு முடிவுகள்
இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்படும். அப்போதுதான் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையும் நிறைவடைந்து விட்டது.
எனினும் சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் அக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு எழுதிய மாணவர்களால், பிற கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக அரசுதான் பொறுப்பு
இதுகுறித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி, பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது ஆகியவைதான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்த சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அவற்றில் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்தல், நிதி நெருக்கடியைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.