‛என்னால ஏத்துக்க முடியல... எனக்கு 7 நாள் வகுப்பு வேணும்...’ நேரடி வகுப்பு: மனம் திறக்கும் மாணவர்கள்!
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் மனநிலை இதோ..!
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உயர்கல்வித்துறையின் உத்தரவை அனைத்து கல்லூரிகளும் முறையாக பின்பற்றுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர்களின் மனநிலை:
சௌமியா, 3 ம் ஆண்டு மாணவி:
ஆன்லைனில் தேர்வுகள் வைக்கப்படுவதன் மூலம் எங்களது படிப்புத்திறன் குறைய அதிக வாய்ப்புள்ளது. நேரடியாக தேர்வு வைத்தால் எங்களது அறிவு திறன் வெளிப்படுத்த முடியும். தொடர்ந்து, வாரம் 6 நாட்கள் கல்லூரி வைப்பதால் எங்கள் மீது திணிக்கும் படியான மனநிலை உண்டாகிறது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் வாரத்தில் குறைந்தது ஒரு 5 நாட்களே அதிகமானது தான் என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிசெல்வன், 3 ம் ஆண்டு மாணவர் :
எங்களுக்கு நடைபெற இருக்கும் பருவத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிட்டனர். அதில், ஒரு நாள் ஆன்லைனில் தேர்வு என்றும், மறுநாள் நேரடி தேர்வு என்றும் தொடர்ந்து எங்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். ஒரே முடிவாக நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். 6 நாட்கள் கல்லூரி திறப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, சீக்கிரம் பருவத் தேர்வு வைத்து முடித்துவிட்டால் நல்லது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
மோனிஷ், 2 ம் ஆண்டு மாணவர் :
நான் படித்த நாட்கள் முதல் எனக்கு முழுவதுமே ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடந்தது. திடீரென நேரடி தேர்வு என்று அரசு சொல்லும்போது எங்கே நான் தேர்வில் தோற்று விடுவேனோ என்ற பயம் என்னை ஆட்கொள்கிறது. 6 நாட்கள் கல்லூரி என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு நாட்கள் பாடம் மட்டும் ஆன்லைன். இப்போது எதற்கு ஆப்லைன்.
தேஜ ஸ்ரீ , 3 ம் ஆண்டு மாணவி :
அரசு தற்போது அறிவித்த அறிவிப்பை நான் முழுமையாக ஏற்கிறேன். தேர்வு என்பதே மாணவர்களின் திறனை கண்டறியதான். அதையும் ஆன்லைனில் நடத்தி அவர்களின் திறனை கட்டுப்படுத்துவது போல் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 நாட்கள் கல்லூரிகளுக்கு வர சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரூபிகா, 3 ம் ஆண்டு மாணவி :
ஆன்லைனில் தேர்வு வைப்பதன் மூலம் மாணவர்களின் மனநிலை சமூக வலைத்தளங்களை நோக்கி அதிகம் செல்கிறது. எனவே, நேரடியாக தேர்வு மற்றும் வகுப்புகள் நடத்தப்படுவது நல்ல முடிவு தான். அரசாங்கமும் அதையே தான் செய்துள்ளது. என்னை கேட்டால் வாரத்தில் ஏழு நாட்களும் வகுப்புகள் வைத்தாலும் நான் செல்ல தயார் தான்.