கல்லூரியில் சேரும் மாணவர்களே.. இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் வேணும்- இதோ லிஸ்ட்!
மாணவர்கள் எந்தப் படிப்பில் சேர்ந்தாலும் கல்லூரி சேர்க்கையின்போது மாணவர்களும் பெற்றோர்களும் சில சான்றிதழ்கள், ஆவணங்கள், புகைப்படங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி, கல்லூரியில் சேரக் காத்திருக்கும் மாணவர்கள் என்னென்ன சான்றிதழ்கள், ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்? இதோ பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 2024- 25ஆம் கல்வியாண்டுக்கான 11, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் அண்மையில் நடந்து முடிந்துள்ளன.
மாநில உயர் கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரிகள்/ சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி அன்று வெளியாகின்றன.
இந்த நிலையில் மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து ஓரளவு திட்டமிட்டு வைத்திருப்பீர்கள். பல்வேறு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களையும் பெற்று வைத்திருக்கலாம்.
நூற்றுக்கணக்கான படிப்புகள்
பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், வேளாண்மை, கலை, அறிவியல், சட்டம், கல்வியியல், நுண்கலை, ஃபேஷன் டிசைனிங் என நூற்றுக்கணக்கான படிப்புகள் உள்ளன.
மாணவர்கள் எந்தப் படிப்பில் சேர்ந்தாலும் கல்லூரி சேர்க்கையின்போது மாணவர்களும் பெற்றோர்களும் சில சான்றிதழ்கள், ஆவணங்கள், புகைப்படங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே கடைசி நிமிட அலைச்சல்களையும் இன்னல்களையும் தவிர்க்க உதவும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
மாணவர்கள் வளரிளம் பருவத்தினர் என்பதால் தோற்றம் மாறிக்கொண்டே இருக்கும். அதனால், இந்த விடுமுறைக் காலத்தில் புரொஃபஷனல் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பாஸ்போர்ட் அளவு, ஸ்டாம்ப் அளவு புகைப்படங்களை எடுத்து, பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். கூடவே, ஜி-மெயிலிலோ வாட்ஸப்பிலோ அதி உயர் தரத்தில் புகைப்படத்தின் டிஜிட்டல் வடிவத்தையும் வாங்கிக்கொள்வது முக்கியம்.
பிறப்பு சான்றிதழ் (Birth certificate)
ஏற்கெனவே பிறப்பு சான்றிதழ் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுவிட்டது. எனினும் அசல் ஆவணம் இல்லாதவர்கள், விண்ணப்பித்து புதிதாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கு (Bank Account)
மாணவர்கள் தங்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். வங்கிகளில் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கீழ் கூட்டுக் கணக்கைத் (Joint Account) தொடங்கலாம். 18 வயது முடிந்திருந்தால் தனியாகவே வங்கிக் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். ஏனெனில் கல்லூரி பரிவர்த்தனைகளுக்கும் உதவித்தொகைகள் பெறவும் தனி வங்கிக் கணக்கு முக்கியம் ஆகும்.
பான் கார்டு (PAN CARD)
பான் கார்டு இல்லாத மாணவர்கள் எளிமையான முறையில் விண்ணப்பித்துப் பெறலாம். வாழ்நாள் முழுமைக்கும் இந்த எண் மாறாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
இந்த சான்றிதழ்கள் எல்லாம் அவசியம்
கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடு பெறவும் கட்டணச் சலுகை பெறவும் உதவித் தொகைக்கும் சாதிச் சான்றிதழ் (Community Certificate), முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduation Certificate), வருமானச் சான்றிதழ் (Income Certificate), பிறப்பிடச் சான்றிதழ் (Nativity certificate) ஆகியவை அவசியம்.
சான்றிதழ்கள் இல்லாத மாணவர்கள் இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். டிஜிட்டல் வடிவிலும் இந்த சான்றிதழ்கள் கிடைக்கும்.
தமிழ் வழிக் கல்வியில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களுக்கு, அரசு சார்பில் வேலைவாய்ப்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் சூழலில், அதற்கான Person Studied in Tamil Medium (PSTM) சான்றிதழைப் பெற்று வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வருமானச் சான்றிதழ்
பெரும்பாலான கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர வருமானச் சான்றிதழ் கோரப்படும். சில குறிப்பிட்ட தேர்வுகளுக்கும் உதவித் தொகைகளுக்கும் வருமானச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த வகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொளவும். பெரும்பாலும் சமீபத்திய வருமானச் சான்றிதழே கேட்கப்படும் என்பதால், புதிதாக வாங்கி வைக்கவேண்டியது முக்கியம். இப்போது பெரும்பாலான சான்றிதழ்கள், ஆன்லைனிலேயே பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளுக்கும் சில மாநிலக் கல்வி நிறுவனங்களின் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க, புகைப்படம் மற்றும் கைரேகையை, ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். அதி உயர் தரத்தில் ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டால், கல்வி நிறுவனங்கள் கேட்ட அளவில் Crop செய்து, ஸ்கேன் செய்துகொள்ளலாம்.
நகல்களும் கட்டாயம்
ஏற்கெனவே இந்த சான்றிதழ்கள் உள்ள மாணவர்கள், தேவையான அளவு நகல்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிற முக்கியச் சான்றிதழ்கள்
உயர் கல்விக்குத் தேவையில்லை என்றாலும், ரேஷன் கார்டில், குடும்ப உறுப்பினராக இல்லயென்றால், அதற்குப் பதிவு செய்து, பெற்றுக் கொள்ளலாம்.
18 வயது முடிவடைந்து விட்டால், வண்டி ஓட்டிப் பழகி, ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.
தகவல் சரிபார்ப்பு
எல்லா சான்றிதழ்களிலும் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக ஒரேபோல உள்ளதா என்று சரிபார்க்க வேண்டியதும் அவசியம்.

