ப்ளஸ் டூ தேர்வில் 2.60 லட்சம் பேர் ‛ஃபெயில்’... தொடரும் தோல்விகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்த தேர்வு முடிவுகள் என்பது, கர்நாடக மாநில பள்ளி கல்வி வரலாற்றில் மிக மோசமான முடிவுகள் என்பது மறுக்கமுடியாது.
• ஆந்திராவின் 10ம் வகுப்பு தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது கர்நாடகாவின் பிளஸ் டூ தேர்வில், 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் பெயிலாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
• தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி, பிளஸ் டூ மற்றும் SSLC எனும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்தச் சூழலில் தற்போது கர்நாடகாவில், Pre University Course எனும் PUC 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டன. தமிழகத்தின் பிளஸ் டூ போன்ற இந்த பியூசி 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள், பெரும் அதிர்ச்சியை, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே ஏற்படுத்தியுள்ளது.
• தற்போது, கர்நாடகத்தில் வெளியாகியுள்ள பியூசி 2-ம் ஆண்டு முடிவுகளின் படி, தேர்வு எழுதிய 6 லட்சத்து 83 ஆயிரத்து 563 மாணவ, மாணவிகளில், 2 லட்சத்து 60 ஆயிரத்து 597 பேர் தோல்வி அடைந்துள்ளனர். 35 சதவீத மதிப்பெண்கள் பெற முடியாமல், 2 லட்சத்து 60 ஆயிரம் மாணாக்கர்கள் தோல்வி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
• கோவிட் 19 கொரோனா வைரஸின் தாக்கம், பெரிய அளவில் மாணவ, மாணவிகளின் கல்வியைப் பாதித்துள்ளது என்பதைத்தான் இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன என அம்மாநிலத்தின் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
• தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரு பக்கம் என்றாலும், 600 மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண்கள் வாங்கி, மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவராக, பெங்களூரைச் சேர்ந்த சிம்ரன் சேஷா ராவ் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல், மாணவர்களை விட மாணவிகள்தான், கர்நாடகத்திலும் இந்த முறை தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
• இந்த தேர்வு முடிவுகளை டிவிட்டர் பதிவு மூலம் அறிவித்துள்ள மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நாகேஷ், தோல்வி அடைந்த மாணவர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்றும், இந்த மாத இறுதியில் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதில் எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற வாய்ப்பு உண்டு என்றும் அறிவித்துள்ளார்.
• ஆனால், இந்த தேர்வு முடிவுகள் என்பது, கர்நாடக மாநில பள்ளி கல்வி வரலாற்றில் மிக மோசமான முடிவுகள் என்பது மறுக்கமுடியாது. ஏனெனில், கிட்டத்தட்ட 39 சதவீதம் மாணாக்கர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு, கோவிட் 19 காரணமாக, அனைத்து மாணாக்கர்களும் ஆல் பாஸ் ஆன நிலையில், இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதத்தில் மிகப் பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
• கர்நாடகாவில் மட்டுமல்ல, சில தினங்களுக்கு முன் ஆந்திராவில் வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட 2 லட்சம் மாணவ, மாணவியர் பெயிலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், ஆந்திராவில் உள்ள 71 பள்ளிகளில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருந்தது.
• இதுபோன்ற மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் சரிவது என்பது பெரும் அதிர்ச்சி தரக்கூடியது என்றும் இது, கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட கற்றல் குறைபாடுதான் காரணம் என்றும் மனோவியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, உளவியல் நிபுணர் வர்ஷாவிடம் பேசிய போது, கொரோனாவின் தாக்கம், கல்வித்துறையில் குறிப்பாக, பள்ளிக் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். இது தொடர்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம் என அனைவருக்கும் உடனடி மற்றும் தொடர் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் தவறான முடிவுகளுக்குச் செல்லாமல் இருக்க, உடனடி ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும், கல்வித்துறை சார்பில் துணைத் தேர்வு அறிவிப்புகளும் நம்பிக்கை ஊட்டலும் அவசர நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உளவியல் நிபுணர் வர்ஷா, ABP நாடு செய்தியாளரிடம் தெரிவித்தார்.
• தமிழகத்தில் வரும் 20-ம் தேதி, முதல்முறையாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ என இரு முக்கிய பொதுத்தேர்வுகளுக்கு முடிவுகளும் ஒரே நாளில் அறிவிக்கப்பட இருக்கின்றன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் அச்சிடும் பணியும் கிட்டத்தட்ட முடிவடைந்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு தயார்நிலையில் தேர்வுத்துறை உள்ளது எனத் தகவகள்தெரிவிகின்றன. கிட்டத்தட்ட 17 லட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் இந்தத் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆந்திரம், கர்நாடகம் போல் இல்லாமல், தமிழக மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று, அனைவரும் தேர்ச்சிப் பெறுவார்கள் என்று நம்புவோம்.