PGP Admission: ISB முதுகலை மாணவர் சேர்க்கை: முதல் சுற்றில் விண்ணப்பிக்க செப். 12 கடைசி!
ISB PGP Application Deadline: விண்ணப்பிப்போருக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஏற்கும். 2-வது சுற்றில் தேர்வாகும் மாணவர்களுக்கு 75% மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
ஓராண்டு முதுகலை படிப்பு சேர்க்கையின் முதல் சுற்று விண்ணப்பப் பதிவை 12-ம் தேதியுடன் நிறுத்தப்போவதாக இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிவித்து உள்ளது. தொழிற்கல்வியில் இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் 23 வது இடத்திலும், ஆசிய அளவில் 5 வது இடத்திலும் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், ஓராண்டுக்கான முதுகலை படிப்பை வழங்குகிறது. இதில் படித்த பல மாணவர்கள் இப்போது மிகப்பெரும் தொழிலதிபர்களாக, வர்த்தக ஆலோசகர்களாக, தொழில் வல்லுநர்களாக, மிகப்பெரும் நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
பிசினஸ் துறையில், மேலாண்மைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பல மாணவர்கள், ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரக்கூடியவர்கள் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினசில் கல்வி கற்க விரும்புகிறார்கள். இவர்களுக்காகவே ஓராண்டு முதுகலை பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த கல்வி நிறுவனம். இதில் படிக்க விரும்புவோருக்கான விண்ணப்பப்பதிவை இரண்டு சுற்றுகளாக நடத்தி வருகிறது இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்.
அதன்படி admission.isb.edu என்ற அவர்களின் இணையதளத்தில் முதல் சுற்றுக்கான விண்ணப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் சுற்றுக்கான விண்ணப்பதிவு செப்டம்பர் 12-ம் தேதி நிறைவடைய இருப்பதாக இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் தெரிவித்து உள்ளது.
முதல் சுற்றில் விண்ணப்பிப்போருக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஏற்கும். ஆனால், முதல் சுற்றுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விதிகளை அந்த நிறுவனம் வகுத்து உள்ளது.
அதன்படி, விண்ணபிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை முடித்து பட்டம் பெற்று இருக்க வேண்டும், பட்டப்படிப்பை முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முழு நேர பணியாளராக பணிபுரிந்து இருக்க வேண்டும், அத்துடன் அவர்களின் GMAT அல்லது GRE மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் தெரிவித்து உள்ளது.
24 மாதங்களுக்கும் குறைவாக பணிபுரிந்தவர்களும் முதல் சுற்றுக்கு விண்ணப்பிக்க 2 வழிகள் உள்ளன. YOUNG LEADERS PROGRAMME என்ற திட்டத்தின் மூலமாக இறுதியாண்டு மற்றும் இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல், EARLY ENTRY OPTION என்ற திட்டத்தின் மூலமாக 2 ஆண்டுக்களுக்கு குறைவான முழு நேர பணி அனுபவம் கொண்டவர்கள் முதல் சுற்றுக்காக விண்ணப்பிக்கலாம்.
முதல் சுற்றில் விண்ணபிக்கும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் 2-வது சுற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 75% மட்டுமே கல்விக்கட்டணத்தில் தள்ளுபடி செய்யப்படும். முதல் சுற்று விண்ணப்பப் பதிவு முடிந்தவுடன் 2 வது சுற்றுக்கான விண்ணப்பதிவை இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிவிக்கும்.