டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு உண்மையா? நடவடிக்கை என்ன?- அமைச்சர் பிடிஆர் விளக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் உண்மையா என்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் உண்மையா என்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்று தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளனரா என்று ஒப்பிட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
தென்காசியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்று தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளனரா என்று ஒப்பிட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாவட்டங்களின் எண்ணிக்கையில் முந்தைய காலங்களோடு ஒப்பிடும்போது வேறுபாடு உள்ளதா என்பது குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
நியாயமற்ற ஒன்று
நிதியை விட மனிதவள மேலாண்மை முக்கியம். அதற்காகவே சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் காலி இடங்களுக்கு 24 லட்சம் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு 2400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். 6 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். 100 கோடி தாள்களை அச்சடிக்க வேண்டும். இந்த நிர்வாக நடைமுறை நியாயமற்ற ஒன்று.
இன்றைய தொழில்நுட்ப உலகில் இது சரியானதல்ல. இதற்காகவே சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டோம். சமூக நீதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தோம். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது’’.
இவ்வாறு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு நேரடியாகச் சென்று, அரசிடம் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 4 Result: முடிவுக்கு வந்த 8 மாதக் காத்திருப்பு- குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு- பார்ப்பது எப்படி?
TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!