TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!
TNPSC Group 4 Result 2023: குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் கழித்து முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்வெழுதிய 18 லட்சம் பேரும் குவிந்ததால் டிஎன்பிஎஸ்சி இணையதளமே முடங்கியது.

குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் கழித்து முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்வெழுதிய 18 லட்சம் பேரும் குவிந்ததால் டிஎன்பிஎஸ்சி இணையதளமே முடங்கியது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்குகு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.
அதிகபட்சத் தேர்வர்கள் பங்கேற்பு
கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் குரூப் 4 தேர்வில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022-ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர்.
10,117 காலி இடங்களைக் கொண்ட குரூப் 4 அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதி இருந்தனர். கடந்த ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகின.
முன்னதாக தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் தாமதமான நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. மீண்டும் மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் ஒரு வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், ’’தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மாற்றுத் திறனாளிகள், ஏழைத் தேர்வர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் குரூப்4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்’’ என்று தேர்வர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் மார்ச் 8 அன்று இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.
7 ஆயிரமாக இருந்த காலி இடங்கள்
முன்னதாக குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் என மொத்தம் 7,382 காலி இடங்கள் இருந்த நிலையில், மொத்தப் பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
குரூப் 4 தேர்வுக்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 18 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளைக் காணக் குவிந்ததால், டிஎன்பிஎஸ்சி இணைய தளமே முடங்கியது.
எனினும் தேர்வர்கள், https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK என்ற முகவரியை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை நேரடியாகக் காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

