அடிப்படை ஊதிய முரணை நீக்கும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, செப்டம்பர் 28ஆம் தேதி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது.
![அடிப்படை ஊதிய முரணை நீக்கும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு Indefinite hunger strike until removal of basic pay disparity: Intermediate teachers agitation அடிப்படை ஊதிய முரணை நீக்கும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/3646026b5818948c9b1ebe314a17f47e1695016821623332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, செப்டம்பர் 28ஆம் தேதி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த புதிய கிளை தொடக்க விழாவிற்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட், மாநில பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டு, பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
14 ஆண்டுகளாக வஞ்சனை
’’கடந்த 2009-க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, அவர்களோடு பணியாற்றுகின்ற சக ஆசிரியர்களைப் போலவே அடிப்படை ஊதிய உயர்வை வழங்க வேண்டும். மற்ற இடைநிலை ஆசிரியர்களைப் போல ஊதியம் வழங்காமல், 14 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்.
எங்களுக்கு முன்னால் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ரூ.8370 அடிப்படை ஊதியமாகவும், ஒவ்வொரு நாள் பின்னாடி சேர்ந்த எங்களுக்கு ரூ.5,200 என அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பதவி ஒரே கல்வித்தகுதி ஒரே பணி என்று அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்து வந்தாலும், ஊதியம் மட்டும் இரு வேறு விதமாக இருந்து வருகிறது.
இதனால் கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் கலந்துகொண்டு, திமுக ஆட்சி அமைந்ததும் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என வாக்குறுதி கொடுத்தார். அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் 311-ல் வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் எங்களுடைய ஊதிய முரண்பாடு கலைக்கப்படவில்லை.
9 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை
இதனால் கடந்த 2022 டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஆறு நாட்கள் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க மூன்று நபர் குழு அமைத்து, அறிக்கையின் முடிவில் உங்களது ஊதிய முரண்பாடு களையப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த 9 மாதங்கள் ஆகியும் இன்று வரை எங்களது ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.
இந்நிலையில் தருமபுரியில் நடைபெற்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க தொடக்க விழாவில், எங்களது ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தீர்மானித்துள்ளோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இந்த முறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கின்ற வகையில் நாங்கள் ஓயப் போவதில்லை. சமூக நீதிக்கான தமிழ்நாட்டில், ஒரே வேலைக்கு இரு வேறு விதமான அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.
தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை ஊதியமே ஆசிரியர்களுக்கு
இந்தியாவிலேயே தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை ஊதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு இங்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஊதிய முரண்பாட்டை முதலமைச்சர் தலையிட்டு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எவ்வளவு இழப்புகள் வந்தாலும், எங்களது ஊதிய முரண்பாடு களையப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடஉள்ளோம்’’.
இவ்வாறு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)