IIT: மாணவர்கள், ஆசிரியர்களுக்காக ஐஐடி சென்னை தொடங்கிவைத்த புதுத் திட்டம்; என்ன தெரியுமா?
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக ஐஐடி சென்னை மகிழ்ச்சியாக இருங்கள் என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக ஐஐடி சென்னை மகிழ்ச்சியாக இருங்கள் என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது. மாணவர் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்திற்காக ஆசிரியரோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் 'குஷல் புரோகிராம்' எனப்படும் தனித்துவமான முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் ஆதரவுடன், ஐஐடி கல்வி நிறுவனத்தின் அனைத்து மாணவர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களை சென்றடையும் வகையில் சுதந்திரமான முகமை ஒன்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் எனப்படும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், நிறுவன வளாகத்திற்குள் தொடர்புடைய அனைவரையும் சென்றடையும் வகையில் நல்வாழ்வு கணக்கெடுப்பு ஒன்றை மே 4ஆம் தேதி தொடங்கியது. இக்கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் சுதந்திரமான முகமை ஒன்று தொடர்பு கொண்டு கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும். தமிழ்நாடு அரசின் தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் ஆதரவுடன் இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது.
கணக்கெடுப்பை நடத்துவதற்காக 30-க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வின்போது, தேசிய நலவாழ்வு முகமையால் (என்எச்எம்) நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நல்வாழ்வு நிபுணர் ஒருவர் தனித்தனியாக உரையாடி, கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவார்.
இந்த நல்வாழ்வுத் திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தொடங்கி வைத்தார். மாணவர் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்திற்காக ஆசிரியரோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் 'குஷல் புரோகிராம்' எனப்படும் தனித்துவமான முன்முயற்சியையும் அவர் துவக்கி வைத்தார்.
இதுகுறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "மகிழ்ச்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். ஐஐடி மெட்ராஸைப் பொறுத்தவரை இந்த வளாகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் செய்வதில் இக்கல்வி நிறுவனம் உறுதியாக இருந்து வருகிறது. அதனை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த சுதந்திரமான நலவாழ்வு கணக்கெடுப்பு" எனக் குறிப்பிட்டார்.
மாணவர்களோடு தொடர்பில் இருப்பதற்காக ஐஐடி கல்வி நிறுவனம் 'மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற இணைய தளத்தை தொடங்கியுள்ளது.
இணைய முகவரி: https://behappy.iitm.ac.in/ -ஐக் க்ளிக் செய்து, புதிய திட்டத்தைக் காணலாம்.